கொரோனா விதிகள் மீறல் - பல்லடம் ஜவுளிக்கடைக்கு அபராதம்

கொரோனா தொற்று விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பல்லடத்தில் துணிக் கடையின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது எடுத்த படம்.
பல்லடத்தில் துணிக் கடையின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது எடுத்த படம்.
Published on

பல்லடம்:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கவும் அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில் பல்லடத்தில் அரசின் கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாத துணிக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

பல்லடம் அரசு மருத்துவமனை எதிரே தனியாருக்குச் சொந்தமான துணிக்கடை உள்ளது. இங்கு புது வருடத்தை முன்னிட்டு தள்ளுபடி விலையில் துணிகள் விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில் துணிக்கடை முன்பு ரோட்டை ஆக்கிரமித்து பந்தல் போடப்பட்டிருந்தது. மேலும் துணிக்கடையினுள் முக கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக துணிகளை எடுக்க மக்கள் குவிந்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் உத்தரவின்பேரில் நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர் தலைமையிலான குழுவினர் அந்த துணிக்கடைக்கு சென்று கடையின் முன் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாத காரணத்திற்காக எச்சரிக்கை விடுத்தனர். 

இந்தநிலையில் தற்போது அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும் கொரோனா தொற்று விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். கடைக்குள் கூட்டமாக அனுமதிக்கக்கூடாது அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். அடுத்த முறை இதுபோல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com