ரூ.190 கோடியில் தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புகள் - மாநகராட்சி மேயர் தகவல்

தஞ்சையில் ரூ.190 கோடியில் தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கை அகற்றிவிட்டு குடியிருப்புகள் கட்டும் பணியை மேயர் சண்.ராமநாதன் ஆய்வு
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கை அகற்றிவிட்டு குடியிருப்புகள் கட்டும் பணியை மேயர் சண்.ராமநாதன் ஆய்வு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 19-&வது வார்டில் சுமார் 20.23 ஏக்கர் நிலப்பரப்பில் செக்கடிக்கு அருகில் ஜெபமாலைபுரத்தில் குப்பை கிடங்கு உள்ளது. மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் இருந்தும் தினசரி 110 மெட்ரிக் டன் அளவுடைய குப்பைகள் இங்கு சேகரிக்கப்பட்டு வருகிறது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் மலைபோல் தேங்கி அடிக்கடி தீ விபத்து ஏற்படும். அப்போது புகைமூட்டமாகி ஜெபமாலைபுரம், செக்கடி, சீனிவாசபுரம், மேலவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவும். இதனால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன.

இதனால் குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் குப்பை கிடங்கில் ஆய்வு செய்தார். இன்னும் 3 மாதத்துக்குள் இங்கிருந்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அலவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:&

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பயோமைனிங் என்ற திட்டம் செயல்படுத்தபட்டு 4 எண்ணிக்கையிலான தனித்தனி எந்திர யூனிட்டுகள் மூலம் தினசரி 1200 முதல் 1500 கனமீட்டர் அளவிலான குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட சில கழிவுகள் டால்மியா சிமெண்ட் நிறுவன பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

ஏனைய பிற கழிவுகள் உரமாகவும், விவசாய பயன்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை சுமார் 60 ஆயிரம் கனமீட்டர் அளவுடைய குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு அப்புறபடுத்தப்பட்டு உள்ளது.

இப்போது கோடைக்காலம் என்பதால் தினசரி குறைந்தபட்சம் 1500 முதல் 2000 கனமீட்டர் அளவுடைய குப்பைகள் அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியானது வருகிற ஜூன் 2022&க்குள் முடித்து தருவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்ட பணிகள் முடிவடைந்த பின் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ரூ.190.80 கோடி மதிப்பில் தரை தளம் உள்ளிட்ட 10 தளங்களை கொண்ட 1000 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.

இதற்கான திட்ட முன்மொழிவுகள் தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதி கோரி நகராட்சி நிர்வாக இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேற்படி இடத்தில் மண்பரிசோதனை செய்யப்பட்டு அதன் தரத்திற்கேற்ப நவீன கட்டமைப்பு உத்திகளுடன் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி,  மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com