சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

செங்கல்பட்டு கோர்ட்டில் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு விசாரணை 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள சுஷில்ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

மாணவிகளின் புகாரையடுத்து அவர் மீது மொத்தம் 6 போக்சோ வழக்குகள், 2 பெண் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டு மற்றும் கூடுதல் மகிளா அமர்வு கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்குகளில் 4 போக்சோ வழக்குகளுக்கு செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டும், 2 வழக்குகளுக்கு கூடுதல் மகிளா அமர்வு கோர்ட்டும் ஜாமீன் வழங்கி இருந்தது.

முதல் போக்சோ வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த வழக்கில் அவருக்கு செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு அவருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

தற்போது வரை 8-வழக்குகளில் 7-வழக்குகளுக்கு ஜாமீன் பெறப்பட்டுள்ள நிலையில் ஒரு போக்சோ வழக்கில் மட்டும் ஜாமீன் அளிக்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்த முதல் போக்சோ வழக்கு விசாரணைக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் சிவசங்கர் பாபா நேற்று ஆஜரானார். அப்போது நீதிபதி வழக்கு விசாரணையை இந்த மாதம் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com