கடலூர் அருகே காதல் திருமணம் செய்த நர்ஸ் தற்கொலை

கடலூர் அருகே காதல் திருமணம் செய்த நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கடலூர்:

கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). டிரைவர். இவரது மனைவி அஞ்சுகம் (வயது 32). இவர் அதே பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக சதீஷ்குமாருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததால் வீட்டில் இருந்து வந்தார். தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக சதீஷ்குமார் வேலைக்கு செல்வதாக தனது மனைவி அஞ்சுகத்திடம் தெரிவித்தார்‌. ஆனால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல வேண்டாம் என அஞ்சுகம்கூறி உள்ளார். ஆனால் நேற்று அஞ்சுகம் வேலைக்கு சென்ற பிறகு சதீஷ்குமார் வேலைக்கு சென்றுள்ளார்.

நேற்று மாலை வழக்கம் போல் அஞ்சுகம் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் சதீஷ்குமார் காணவில்லை. பின்னர் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது வேலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அஞ்சுகம் தனது 2 குழந்தைகளை அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் டி.வி. பார்க்க சொல்லிவிட்டு, தனது வீட்டில் வந்து தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று இரவு வழக்கம் போல் சதீஷ்குமார் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்ளே பூட்டிருந்தது. பின்னர் சந்தேகமடைந்த சதீஷ்குமார் ஜன்னல் வழியாக பார்த்தார்.

அப்போது தனது மனைவி அஞ்சுகம் தூக்கு மாட்டி இருந்ததை பார்த்து கதறி அழுதார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று அஞ்சுகத்தை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com