

vதிண்டுக்கல்:
தமிழகத்தில் தற்போது கோடைவெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இரவில் கடும் பனிபொழிவும், பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் வரவே அச்சமடைந்துள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க குளிர்பானங்கள், ஐஸ் கிரீம்கள் விற்பனையும் அதிக அளவில் நடந்து வந்தாலும், பழமை மாறாமல் இயற்கை பானங்கள் மற்றும் பழங்களை வாங்கி உண்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோடை காலங்களில் திரும்பிய திசையெல்லாம் தர்பூசணி விற்பனை நடைபெறும். தமிழகத்தில் திண்டிவனம் பகுதியில் இருந்து மட்டுமே தர்ப்பூசணி பல்வேறு ஊர்களுக்கு செல்லும்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் விளைந்த தர்ப்பூசணி பழங்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் தர்ப்பூசணி விவசாயத்தை கைவிட்டு வேறு விவசாயத்திற்கு மாறினர். திண்டிவனத்தை தொடர்ந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களிலும் தர்ப்பூசணி விளைவிக்கப்படுகிறது.
சராசரியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வாரம் 50 ஆயிரம் டன் தர்ப்பூசணி விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது 25 ஆயிரம் டன் பழங்கள் மட்டுமே வந்துள்ளன.
இதனால் ஆரம்பத்தில் 1 கிலோ ரூ.10 என விற்கப்பட்ட தர்ப்பூசணி தற்போது ரூ.20 க்கு விற்கப்படுகிறது. அதனை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
இதே போல் கோடைகாலத்திற்கு உகந்த இயற்கை பானமான கம்பங்கூழ் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. இதற்கு சைடிஸ்சாக வத்தல், ஊறுகாய், வடகம் ஆகியவை வைக்கப்படும்.
தற்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கருவாடு தொக்கு, கலர்கலர் அப்பளம், உப்பு மிளகாய், வறுத்த எண்ணெய் மிளகாய் உள்ளிட்ட பொருட்களும் வைக்கப்படுகின்றன.
இவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால் அதிக அளவு வாங்கி பருகி வருகின்றனர். குளிர்பானங்களில் ரசாயனம் கலப்பதாலும் அவை உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாலும், கோடை வெப்பத்தை தணிக்க இதுபோன்ற இயற்கை பானங்களை மக்கள் அதிகம் விரும்பி வருகின்றனர்.
இன்னும் 2 மாதங்களுக்கு கோடைவெயிலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் இதன் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.