

நெல்லை:
கொரோனா 3-ம் அலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா கட்டுப் பாடுகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அதிகாரி பெருமாள், மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் குமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், நெல்லை, சேரன்மகாதேவி ஆர்.டி.ஓ.க்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், முக்கிய வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-
கொரோனா வேகமாக பரவி வருவதை தடுப்பதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை நெல்லை மாவட்டத்தில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
வணிக நிறுவனங்கள், தியேட்டர்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மேலும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கை கழுவும் திரவம் வழங்கி அவர்களது உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.
அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன், கடை களுக்கு சீல் வைக்கப்படும். பொது வெளியில் முககவசம் அணி யாமல் வரும் பொது மக்களுக்கு உடனடி அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது சில வியாபாரிகள் நாங்கள் 10 மணிக்கு பின்னர் கடைகளை அடைத்து செல்லும் பொழுது போலீசார் தொந்தரவு செய்ய கூடாது என்றனர்.
அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 10 மணிக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாகவே வியாபாரிகள் வீட்டிற்கு சென்று விட வேண்டும் என வலியுறுத்தினர்.