

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதன்காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பயணத்திற்காக பயன்படுத்தினர்.
இந்த நிலையில் வாடகைக்கு எடுக்கப்படும் ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர் மற்றும் பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி., ராஜாரணவீரன் ஆகியோர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
பின்னர் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் உள்ள வாடகை ஆட்டோ, கார் வாகன உரிமையாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:-
முழுஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் தங்களது அவசர தேவைக்காக கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு எடுக்கும்போது அவர்களிடம் அவர்கள் தொலைவை பொறுத்து அந்தந்த கிலோ மீட்ட ருக்கு உரிய கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும். பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
மருத்துவ அவசர உதவிக்காக அழைக்கப்படும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். ஏற்கனவே அதிக வாகன வாடகை கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளதால் இந்த விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன வாடகை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.