மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்

மதுரையில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் 27-ந் தேதி நடக்கிறது புதிய புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்படமாட்டாது.
மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்
Published on

மதுரை

மதுரை மண்டல அளவிலான தபால்சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள தெற்கு மண்டல அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது.

புகார் மனுக்களை வருகிற 14-ந் தேதிக்குள் (புதன்கிழமை) அனுப்பி வைக்க வேண்டும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகாராக இருந்தால் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் இருந்தால் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

இந்த குறை தீர்க்கும் முகாம் சம்பந்தப்பட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தி அடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்படமாட்டாது.

தனியார் கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. குறைகளை அனுப்ப வேண்டிய முகவரி, ''தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் ஜே.பிரதீப் குமார், உதவி இயக்குநர், அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை -625002'' என்ற முகவரிக்கும் pg.madurai@indiapost.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் அனுப்பலாம்.

தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்- செப்டம்பர் 2022" என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.மேற்கண்ட தகவலை மதுரை மண்டல தபால்துறை உதவி இயக்குநர் ரகுநாத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com