திருவிழா காலங்களில் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது?

திருவிழா காலங்களில் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுந்துள்ளது.
திருவிழா காலங்களில் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது?
Published on

மதுரை

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்ச் 6-ந் தேதி கும்ப கோணம் மாசி மகாமக திரு விழா நடைபெற உள்ளது. இதற்காக கும்பகோணத்தில் உள்ள 12 சிவ ஆலயங்கள், 5 பெருமாள் கோவில்களில் கொடியேற்றம் நடை பெற்றது. மாசி மகாமக திரு விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

அப்போது சட்ட விரோத செயல்களை தடுக்க கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி யுள்ள டாஸ்மாக் கடை களை மூடவேண்டும், அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என 2021-ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், இதுவரை மாசி மகாமக திருவிழாவில் டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. எனவே, கும்பகோணம் மாசி மக திருவிழாவில் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சட்டம், ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக கும்ப கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கவும், உள்ளுர் விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும்

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது? இதற்கு அரசாணை ஏதேனும் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

அப்போது மனுதாரர் தரப்பில் அரசாணையின் அடிப்படையில் திருச்செந்தூர் திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. மதுரையிலும் இதுபோன்று நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com