சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சாமியார் சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு தீவிரமானது என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்
ஐகோர்ட்
Published on

சென்னை :

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர்பாபா. இவர் தன் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கடந்த ஜூன் 16-ந்தேதி கைது செய்தனர். ஏற்கனவே, அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவரது ஜாமீன் மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

இந்தநிலையில் பாலியல் புகார் தொடர்பான ஒரு வழக்கில், ஜாமீன் கேட்டு சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான கேளம்பாக்கத்தில் உள்ள நிலத்தை அபகரிக்கும் நோக்கில், பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவிகளை தூண்டி விட்டு, பொய் புகார்களை கொடுக்க வைத்துள்ளனர்’ என்று வாதிட்டார்..

போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சிவசங்கர் பாபாவுக்கு எதிராக தொடர்ந்து பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. நேற்று கூட ஒரு புகார் வந்துள்ளது. அதன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறி, மாணவிகளுடன் சிவசங்கர் பாபா இருக்கும் புகைப்படத்தையும், அவர் மாணவிகளுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளையும் தாக்கல் செய்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிவசங்கர் பாபா தரப்பு வக்கீல், இந்த புகைப்படங்கள் ‘மார்பிங்' செய்யப்பட்டவை, மனுதாரருக்கு 73 வயதாகி விட்டது என்று கூறினார். இதையடுத்து நீதிபதி, ‘சாமியார் என கூறிக்கொள்ளும் சிவசங்கர் பாபாவுக்கு எதிரான புகார்கள் தீவிரமானதாக உள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது. அதனால், ஜாமீன் வழங்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com