கஞ்சா வாலிபர்களுக்கு பயந்து கடையை பூட்டிய வியாபாரி: ரவுடிகளால் காலவரையின்றி மூடப்படுகிறது என நோட்டீஸ்

இந்த நோட்டீசை கண்ட அந்தப் பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர்.
கஞ்சா வாலிபர்களுக்கு பயந்து கடையை பூட்டிய வியாபாரி: ரவுடிகளால் காலவரையின்றி மூடப்படுகிறது என நோட்டீஸ்
Published on

அரக்கோணம் :

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கீழ் பஜாரில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 38) என்பவர் சிமெண்டு மற்றும் கட்டுமானத்திற்கான இரும்பு கம்பி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன்பு கடந்த 11-ந் தேதி கஞ்சா போதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து முத்துராமலிங்கம் தக்கோலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனை அறிந்ததும் தகராறில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் முத்துராமலிங்கத்தின் கடைக்கு சென்று அவரை மிரட்டியுள்ளார். இதனால் முத்துராமலிங்கம் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி மீண்டும் அவரது கடை முன்பாக இரண்டு வாலிபர்களும் வந்து கற்களை வீசியும், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் தராசு ஆகியவற்றை சேதப்படுத்தியும் முத்துராமலிங்கத்திடம், கடையை திறந்தால் ஒழித்து கட்டுவேன் என மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துராமலிங்கம் மீண்டும் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபோது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன முத்துராமலிங்கம் கடையின் ஷட்டரை மூடி பூட்டிவிட்டு, அதன் மீது நோட்டீஸ் ஒன்றை ஒட்டி உள்ளார். அதில் கஞ்சா போதையில் வரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்படுகிறது என்று எழுதி உள்ளார். இந்த நோட்டீசை கண்ட அந்தப் பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக தக்கோலம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முத்துராமலிங்கத்துக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். கடையை திறந்து வியாபரம் செய்யுங்கள் என தெரிவித்தனர். இதையடுத்து முத்துராமலிங்கம் கடையை திறந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com