ஓடும் அரசு பஸ்சில் நகை திருடிய 3 பெண்களை சாதுர்யமாக மடக்கி நகையை மீட்ட கண்டக்டர்

சரியான சமயத்தில் சாதுர்யமாக செயல்பட்டு நகைகளை மீட்டு கொடுத்த பஸ் கண்டக்டரை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
ஓடும் அரசு பேருந்தில் ஒரு பெண்ணிடம் நகை திருடி பிடிபட்ட பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி
ஓடும் அரசு பேருந்தில் ஒரு பெண்ணிடம் நகை திருடி பிடிபட்ட பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி
Published on

பரமத்திவேலூர்:

சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு நேற்று ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் அயலூர் குருந்தம்பாடியை சாந்தாமணி என்பவர் தனது மகளுடன் பயணம் செய்தார். பஸ் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மோகனூர் சாலை அருகே வந்தபோது சாந்தாமணி தனது பேக்கில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை காணவில்லை என கூறி கதறி அழுதார்.இதை பார்த்த கண்டக்டருக்கு மோகனூர் சாலையில் பஸ்சில் இருந்து இறங்கிய 3 பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

உடனே கண்டக்டர் பஸ்சை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். பின்பு பஸ்சில் இருந்து இறங்கிய பெண்களை நோக்கி ஓடினார். இதை பார்த்த பயணிகள் சிலரும் கண்டக்டருக்கு உதவியாக ஓடி சென்றனர்.

மோகனூர் சாலையில் நின்று கொண்டிருந்த 3 பெண்களும் கண்டக்டர் ஓடிவருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் கையில் இருந்த தங்க நகைகளை கீழே போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல் நின்றனர்.

கீழே போட்ட அந்த தங்க நகையை கண்டக்டர் எடுத்து பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் திருடப்பட்ட நகைகளை அடையாளம் காட்டுமாறு கூறினார். அந்த பெண்ணும் அதை தனது நகைகள்தான் என அடையாளம் கூறினார்.

இதை தொடர்ந்து பயணிகள் உதவியுடன் 3 பெண்களையும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 5 பவுன் தங்க நகைகளையும் பரமத்திவேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் நாமக்கல்லில் இருந்து பஸ்சில் ஏறியதும், பஸ்சில் பெண்ணின் அருகில் அமர்ந்து பயணம் செய்த போது சில்லரை காசுகளை கீழே போட்டு விட்டு அவரது கவனத்தை திசைதிருப்பி 5 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 3 பேரும் திருச்சி மாவட்டம் லால்குடி , மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மூர்த்தி மனைவி ராணி (39), மணி மனைவி வைதேகி (29), ரங்கா மனைவி ஆராதனா(28) என்பது தெரியவந்தது.

சரியான சமயத்தில் சாதுர்யமாக செயல்பட்டு நகைகளை மீட்டு கொடுத்த பஸ் கண்டக்டரை போலீசார் பாராட்டினர். தொடர்ந்து அந்த மூன்று பெண்களிடமும் பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகை கிடைத்த மகிழ்ச்சியில் சாந்தாமணி கண்டக்டரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com