ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நவ.21 முதல் விரிவான விசாரணை

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது தொடர்பான வழக்கை வரும் நவம்பர் 21-ம் தேதி முதல் விரிவாக விசாரிக்க இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நவ.21 முதல் விரிவான விசாரணை
Published on

புதுடெல்லி:

மியான்மர் நாட்டில் ராணுவ ஒடுக்குமுறைக்கு பயந்து சுமார் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதேபோல், இந்தியாவில் சுமார் 14 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் தங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

எனினும், அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைந்து ஜம்மு, ஐதராபாத், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் அகதிகளாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர்களில் ஒரு பிரிவினருக்கும் பல்வேறு தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதால் இவர்களை மியான்மர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

உரிய அனுமதியின்றி தங்கள் மாநிலத்தில் தங்கியுள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற தனிக்குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் அறிவுறுத்தி இருந்தது.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையில் பதிவுசெய்து இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளான முஹம்மது சலிமுல்லா, முஹம்மது ஷாகிர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில், அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள தங்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப கூடாது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

சுப்ரீம் கோர்ட் அனுப்பிய நோட்டீசை பெற்றுகொண்ட மத்திய அரசு, இந்த வழக்கில் இன்று தனது கருத்தை தெரிவித்தது. இதுதொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் (அபிடவிட்), ‘இந்தியாவின் எந்த பகுதியிலும் விருப்பம்போல் தங்கி வாழ, இந்நாட்டில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது. உரிய அனுமதி இல்லாமல் அகதிகளாக வந்தவர்கள் இதற்கான உரிமையை கோர முடியாது.

மேலும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அனுமதியின்றி இங்கு தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற அரசு தீர்மானித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்க உரிமை கோரிய மனுதாரர்கள் சர்வதேச அகதிகள் தொடர்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்து நிவாரணம் பெற வேண்டும். இவ்விவகாரத்தை உணர்வுப்பூர்வமாக அணுக முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் அடிப்படை மனித உரிமையும் சார்ந்திருப்பதால் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த விசாரணை வரும் நவம்பர் மாதம் 21-ம் தேதி முதல் தொடங்கும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

மறு விசாரனைக்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் மத்திய அரசு தங்களை வெளியேற்றி விடலாம் என அஞ்சுவதாக மனுதார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறிப்பிட்டார். அப்படி ஏதும் நடந்தால் உடனடியாக கோர்ட்டை அணுகி நிவாரணம் காணலாம் என கோர்ட்டு தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com