பிரிந்த மனைவிக்கு மாதம்தோறும் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் - டெல்லி தொழில் அதிபருக்கு கோர்ட்டு உத்தரவு

பிரிந்த மனைவிக்கு மாதம்தோறும் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க டெல்லி தொழில் அதிபருக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரிந்த மனைவிக்கு மாதம்தோறும் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் - டெல்லி தொழில் அதிபருக்கு கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி:

பிரிந்த மனைவிக்கு மாதம்தோறும் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க டெல்லி தொழில் அதிபருக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ‘டைம்’ பத்திரிகை குழுமத்தில் இருந்து வெளியாகிற ‘பார்ச்சூன்’ பத்திரிகை ஆண்டுதோறும் 500 முன்னணி தொழில் நிறுவனங்களை தேர்வு செய்து தர வரிசைப்படி பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இடம் பெறுகிற தொழில் நிறுவனங்கள் ஒவ்வொன்றின் சொத்து மதிப்பும் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு இருக்கும்.

இந்த பட்டியலில் இடம் பெற்ற பிரபல டெல்லி தொழில் அதிபர் குடும்பத்தில் ஒரு பெண் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு மகள் பிறந்த நிலையில், அந்தப் பெண் கருத்து வேற்றுமை காரணமாக 2008-ம் ஆண்டு மார்ச் மாதம், புகுந்த வீட்டை விட்டு துரத்தப்பட்டார்.

கணவரைப் பிரிந்த நிலையில், அந்தப் பெண், கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அது நிலுவையில் இருந்தபோது 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம், அவரது கணவர் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பெண், குடும்ப நல கோர்ட்டில் ஜீவனாம்சம் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவருக்கு மாதம்தோறும் ரூ.1¼ லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கில், மாதம் தோறும் ரூ.75 ஆயிரம் ஜீவனாம்சம் தர அவரது கணவருக்கு உத்தரவிடப்பட்டது.

இரு உத்தரவுகளையும் எதிர்த்து அந்தப் பெண், சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவரது வழக்கை விசாரிக்குமாறு குடும்ப நல கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து அந்த வழக்கை குடும்ப நல கோர்ட்டின் முதன்மை நீதிபதி நரோத்தம் கவுஷல் விசாரித்தார். அந்தப் பெண் சார்பில் மாதம் தோறும் ரூ.7 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிடுமாறு முறையிடப்பட்டது.

அந்தப் பெண்தரப்பில், பிரிந்து போன கணவருக்கு ரூ.921 கோடி சொத்து இருப்பதாக சுட்டிக்காட்டப்பட் டது. அவரது வீடு 5 நட்சத்திர ஓட்டல் போன்று இருப்பதாகவும், அப்பாவும், மகனும்தான் அதில் குடியிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அவரது கணவர் பல்வேறு கம்பெனிகளில் தான் இயக்குனராக இருப்பதாகவும், ஒரு கம்பெனியில் இருந்து மட்டும் மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளம் பெறுவதாகவும் கூறினார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நரோத்தம் கவுஷல், அந்தப் பெண்ணுக்கு தொழில் அதிபரான அவரது கணவர் மாதம்தோறும் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

அது மட்டுமல்ல, ஆண்டுதோறும் ஜீவனாம்சத்தில் 15 சதவீதம் உயர்த்தித்தர வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com