சின்னசேலம் அருகே மாணவிக்கு ரோஜா பூ கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்டு

சின்னசேலம் அருகே காதலர் தினத்தன்று மாணவிக்கு ரோஜா பூ கொடுத்த ஆசிரியரை சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் நிர்மல்
ஆசிரியர் நிர்மல்
Published on

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது.

இந்த பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் நிர்மல் கடந்த 14-ந்தேதி காதலர் தினத்தன்று அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தனது அறைக்கு அழைத்தார். பின்னர் அவரிடம் ரோஜா பூ கொடுத்து காதலை தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அழுதுகொண்டே தனது வகுப்பறைக்கு சென்றார். இதையறிந்த மற்றொரு ஆசிரியர் லாரன்ஸ் அந்த மாணவியை அழைத்து நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மாணவியை மிரட்டினார்.

இதனிடையே இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஆத்திரமடைந்த அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி சின்னசேலம் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு ரோஜா பூ கொடுத்த ஆசிரியர் நிர்மல் மற்றும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியர் லாரன்ஸ் ஆகியோரை கைது செய்தனர்.

இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர்கள் நிர்மல், லாரன்ஸ் ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் ஆசிரியர் நிர்மல், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஆசிரியர்கள் லாரன்ஸ் மற்றும் ஜான்பிரான்சிஸ் ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

விசாரணை முடிவில் நிர்மல், லாரன்ஸ் ஆகியோரை மட்டுமே இதில் தொடர்புடையவர் என்று கூறி அவர்களை மட்டுமே போலீசார் கைது செய்தனர். ஜான்பிரான்சிசை போலீசார் விடுவித்தனர்.  #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com