

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் உள்பட சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.
அந்த வீடியோ காட்சியில் 2 குழந்தைகள் பசிக் கொடுமையால் அழுதபடி தரையில் கிடந்த மண்ணை அள்ளித் தின்றுகொண்டிருந்தன. இதுபற்றிய தகவல் திருவனந்தபுரம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த வீடியோ காட்சியை பார்த்து விசாரித்த போது குழந்தைகள் மண்ணை அள்ளித்தின்ற இடம் திருவனந்தபுரம் கைதமுக்கு ரெயில்வே புறம் போக்கு பகுதி என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது ஸ்ரீதேவி என்ற ஏழை பெண்ணின் குழந்தைகள் தான் அவர்கள் என்பது தெரியவந்தது.
ரெயில்வே புறம்போக்கு இடத்தில் குப்பைக்கூளங்கள் நிறைந்த பகுதியில் தார் பாயால் தடுப்பு அமைத்து வசித்து வந்த ஸ்ரீதேவிக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். மூத்த குழந்தைக்கு 7 வயது ஆகிறது. கடைசி குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆகியிருந்தது.
ஸ்ரீதேவியின் கணவர் குஞ்சுமோன் மதுபோதைக்கு அடிமையானவர். இதனால் கூலி வேலை மூலம் கிடைக்கும் பணத்தை அவர் ஸ்ரீதேவியிடம் கொடுப்பது இல்லை. இதனால் தாயும், குழந்தைகளும் பல நாட்களாக பசியால் வாடி, வதங்கி வருகிறார்கள். 3 மாத குழந்தைக்கு தாய்பால் கொடுக்கக்கூட முடியாத அளவுக்கு ஸ்ரீதேவியின் உடல்நிலை இருந்தது.
இதற்கிடையில் திருவனந்தபுரம் மேயர் ஸ்ரீகுமாருக்கு இந்த தகவல் தெரியவந்ததை தொடர்ந்து அவரும் அங்கு சென்று ஸ்ரீதேவிக்கு உதவ முன்வந்தார். அவரது 2 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் தாயின் அனுமதியுடன் அரசு காப்பகத்தில் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டது. மற்ற 2 குழந்தைகளும் மிகவும் சிறுவயது என்பதால் தாயின் பராமரிப்பு அவசியம் கருதி அவரிடம் இருக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஸ்ரீதேவிக்கு மாநகராட்சியில் தற்காலிக வேலைக்கும் ஏற்பாடு செய்தார். மாநகராட்சி குடியிருப்பில் ஸ்ரீதேவி குழந்தைகளுடன் வசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்ரீதேவியின் கணவர் குஞ்சுமோனை அதிகாரிகள் தேடிப்பிடித்த போது அவர் மதுபோதையில் இருந்தார். அவருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை கலந்த அறிவுரை வழங்கி உள்ளனர்.