சென்னையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு - ஓட்டல்கள் மூடப்படுகின்றன

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் பல்வேறு ஓட்டல்கள் மூடப்படுகின்றன.
சென்னையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு - ஓட்டல்கள் மூடப்படுகின்றன
Published on

சென்னை:

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை உச்சத்தை எட்டியுள்ளது.

பருவ மழை தொடர்ந்து ஏமாற்றியதாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு வழி வகுத்து விட்டன.

நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்கள் பல்வேறு திட்டங்களைத் தீட்டி அமல் படுத்தி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு அணை கூட கட்டாத அவல நிலை நீடிக்கிறது. குறிப்பாக சென்னை குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நிரந்தர திட்டம் எதுவும் இல்லை. இதனால் இந்த தடவை தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை சென்னை மக்களை தவிக்க வைத்துள்ளது.

ஒரு குடம் தண்ணீருக்காக பல இடங்களில் மக்கள் இரவு-பகலாக அலைகிறார்கள். ஒரு குடத்துக்கு 10 மற்றும் 20 ரூபாய் வரை கொடுக்க மக்கள் தயாராக இருந்தும் தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை அனைத்துத் தரப்பு மக்கள் மற்றும் அனைத்து துறைகளையும் பாதிக்க செய்துள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆழ்துளை குழாய் கிணறுகள், கல்குவாரிகள், விவசாய நிலங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கிறார்கள். ஆனால் மொத்த தேவையில் 50 சதவீதத்தைத்தான் பூர்த்தி செய்ய முடிகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் முதல் தண்ணீர் பிரச்சினை பாதிப்பு, மக்களை நிலை குலைய செய்யும் வகையில் மாறியுள்ளது. உடனடியாக இதற்கு தீர்வு காணப்படாவிட்டால், வரும் நாட்களில் மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு பல்வேறு சேவைத்துறைகளையும் முடக்கி விடும் அபாயத்தை எட்டியுள்ளது. இந்த அபாயத்தின் தாக்கம் கடந்த சில தினங்களாக சென்னையில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையால் மிகப்பெரிய பாதிப்பை ஓட்டல்கள்தான் சந்தித்துள்ளன. சென்னையில் சிறிய, நடுத்தர மற்றும் உயர்ரக ஓட்டல்கள் சுமார் 10 ஆயிரம் உள்ளன. உயர்ரக ஓட்டல்கள் அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கி சமாளிக்கின்றன.

ஆனால் சிறிய, நடுத்தர ஓட்டல் முதலாளிகளை தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை கடுமையாக பாதித்துள்ளன. உணவுப் பொருட்கள் தயாரிக்க, பாத்திரங்கள் கழுவ, சாப்பிட வருபவர்களுக்கு கொடுப்பதற்கு என்று நடுத்தர ஓட்டல்கள் தண்ணீரையே பிரதானமாக நம்பியுள்ளன. தண்ணீர் தட்டுப்பாட்டால் பெரும்பாலான சிறிய, நடுத்தர ஓட்டல்கள் தற்போது 4 அல்லது 5 மணி நேரமே திறந்து வைக்கப்படுகின்றன.

நடுத்தர ஓட்டல் முதலாளிகளில் பலர் தண்ணீருக்கு மட்டும் அதிக பணத்தை செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு ஓட்டல் முதலாளிகள் தண்ணீருக்காக முன்பு மாதம் சுமார் ரூ.20 ஆயிரம் செலவழித்தனர். நடுத்தர ஓட்டல் முதலாளிகள் மாதம் ரூ.70 ஆயிரம் வரை தண்ணீருக்கு செலவு செய்தனர்.

கடந்த 10 நாட்களாக நடுத்தர ஓட்டல் நடத்துபவர்கள் தண்ணீருக்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவழிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதிலும் கடந்த 2 நாட்களாக ஒரு டேங்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை கொடுக்க ஓட்டல் முதலாளிகள் தயாராக இருந்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஏற்கனவே தண்ணீர் பெற்று வந்த இடங்கள் வறண்டு விட்ட நிலையில், புதிய இடங்களில் லாரிகளுக்கு தண்ணீர் கிடைக்காததே தற்போதைய மிகப்பெரிய தட்டுப்பாட்டுக்கு உண்மையான காரணமாகும்.

ஏற்கனவே காய்கறி விலை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. மழை இல்லாமல் விளைச்சல் குறைந்து விட்டதால் கோயம்பேடுக்கு வரும் காய்கறிகள் வரத்து அளவும் சுருங்கி விட்டது. சில குறிப்பிட்ட காய்கறிகள் சுத்தமாக வரவில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 400 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது அது 200 லாரிகளாக குறைந்து விட் டது. தொடர்விலை ஏற்றத்தால் கோயம்பேடுக்கு காய்கறி வாங்க வருபவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து விட்டது.

கடந்த 2 மாதமாக காய்கறி விலை குறையவே இல்லை. மாறாக தாறுமாறாக உயர்ந்து விட்டது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.130 வரை விற்கிறது. இது ஓட்டல் உரிமையாளர்களின் வருவாயில் இழப்பை ஏற்படுத்துகிறது.

இந்த பிரச்சினைக்கு இடையே தற்போது சமையல் தொழிலாளர்களுக்கான கூலியும் உயர்த்தப்பட்டுள்ளது. காய்கறிக்கும் தொழிலாளர்களுக்கும் அதிகம் செலவு செய்வதால் ஓட்டல் முதலாளிகளுக்கு லாபத்தின் அளவு கணிசமாக குறைந்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில் “எங்களால் உணவுப் பொருட்கள் விலையை அதிகரிக்கவும் முடியாது” என்கிறார் அடையார் ஆனந்தபவன் உரிமையாளர் சீனிவாசராவ்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் தண்ணீருக்கு வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம் செலவு செய்ய வேண்டியதுள்ளது. பெரும்பாலான ஓட்டல் முதலாளிகள் தங்கள் ஓட்டலின் இமேஜ், வாடிக்கையாளர்களின் நலன் கருதி, தண்ணீருக்கு 3 மடங்கு அதிகம் செலவழிக்க தயாராக இருந்தாலும் தண்ணீர் கிடைப்பது இல்லை. இதையடுத்து நடுத்தர ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் வகைகளை குறைத்து விட்டனர்.

குறிப்பிட்ட சில உணவு வகைகளை மட்டுமே தயாரித்து விற்கிறார்கள். டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கே இப்போது தண்ணீர் கிடைக்காததால் அந்த குறிப்பிட்ட சில வகை உணவுகளை தயாரிப்பதற்கு கூட திணறும் நிலை உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் பல சிறிய, நடுத்தர ஓட்டல்கள் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன.

இது குறித்து சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம்.ரவி கூறியதாவது:-

தண்ணீருக்கு அதிக விலை கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை என்பதே உண்மையான பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் வரும் நாட்களில் நிறைய நடுத்தர ஓட்டல்கள் மூடப்பட்டு விடும்.

இந்த பிரச்சினை தீர வேண்டுமானால், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும். இதுபற்றி இன்று (திங்கட்கிழமை) அமைச்சர் வேலுமணியை சந்தித்து பேச உள்ளோம்.

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கையில் இறங்க வேண்டும். சிங்கப்பூர், இஸ்ரேல், துபாய் அரபு நாடுகளில் குடிநீர் பிரச்சினை வரும் போது கடல் நீரை சுத்தம் செய்து உடனடியாக மக்களுக்கு வினியோகம் செய்ய அதிரடி நடவடிக்கையில் இறங்குகின்றனர்.

கடல் நீரை சுத்தப்படுத்தி மக்கள் குடிக்கின்ற வகையில் வழங்குவதற்கு சுத்திகரிப்பு உபகரணங்களுடன் கூடிய கப்பல் மூலம் தண்ணீர் தேவையை சமாளிக்கிறார்கள். ஆழ்கடல் பகுதியில் கப்பலை நிறுத்தி கடலில் ஆழ் பகுதியில் இருந்து தண்ணீரை உறிஞ்சி உப்பு தண்ணீரை குடி தண்ணீராக சுத்திகரிப்பு செய்து வழங்கும் குடிநீர் கப்பல் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க இந்த முறையை பின்பற்றலாம். இதுபற்றி அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்.

இயற்கையின் சீற்றத்தால் தலைநகரில் தண்ணீர் பிரச்சினை அதிகரித்து வருவதால் ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கு ஒரு நாளைக்கு 156 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. 12 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு லாரி தண்ணீர் ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்க வேண்டிய உள்ளது.

இதனால் உணவு பொருட்களின் விலையை உடனே உயர்த்த முடியாது. சமையல் செய்ய தேவையான அளவு தண்ணீர் கிடைக்காததால் மதிய சாப்பாடு உள்ளிட்ட முக்கிய உணவுகளை தயாரிப்பதை நிறுத்தி வருகிறோம். தண்ணீர் இல்லாமல் ஓட்டல்களை நடத்துவது சிரமம். இதே நிலை நீடித்தால் ஓட்டல்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து இருப்பதால் ஐ.டி. நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்த படியே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்கள் மாணவர்களை 2 பாட்டில்கள் தண்ணீர் கொண்டுவரும்படி உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனைகளிலும் தண்ணீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மால்களிலும் தண்ணீர் பஞ்சத்தால் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மால்களை திறக்கும் நேரம் குறைக்கப்படுகிறது.

தென்சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஒரு மால் நேர குறைப்பால் 30 சதவீதம் தண்ணீர் பயன்பாட்டை குறைத்துள்ளது. அதுபோல குடியிருப்பு வாசிகளும் தண்ணீர் தேவையை குறைத்து கொள்ளும் நிர்ப்பந்தமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com