

சென்னையில் வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் குடிநீர் வாரியம் குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்து வருகிறது.
வணிக நிறுவனங்கள், பகுதி வணிக கட்டிடங்களுக்கு மீட்டர் பொருத்தப்பட்டு ஆண்டுக்கு 2 முறை வீதம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தற்போது உள்ளது.
இந்த மீட்டர்கள் முறையாக தண்ணீரை கணக்கிடுவதில் தவறுகளும், குளறுபடிகளும் இருந்து வருவதால் குடிநீர் வினியோகத்தை கணக்கிட முடியவில்லை.
ஓட்டல்கள், வணிக கட்டிடங்கள் அதிகளவு குடிநீரை பயன்படுத்துகின்றன. ஆனால் சரியாக கணக்கிட முடியாமல் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதேபோல அடுக்குமாடு வீடுகள், பங்களாக்கள், வாடகை குடியிருப்புகள் போன்றவற்றிலும் குடிநீர் பயன்படுத்துவதை அளவிட முடியாமல் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் குடிநீர் இணைப்புகள் மட்டுமின்றி வீடுகளுக்கும் அவர்கள் பயன்படுத்தும் குடிநீருக்கு ஏற்றாற்போல் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சென்னையில் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், பெசன்ட்நகர் பகுதியில் இதனை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 600 டிஜிட்டல் குடிநீர் மீட்டரை பொருத்தி செயல்படுத்துகிறது. அதனை தொடர்ந்து 6 மாதங்களில் 12,708 டிஜிட்டல் மீட்டர்களை வணிக நிறுவனங்கள், பகுதி வணிக கட்டிடங்களில் நிறுவப்பட உள்ளது. இதுதவிர மாதம் 5 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்துகின்ற வீடுகள், கட்டிடங்களிலும் டிஜிட்டல் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மீட்டருக்கு பதிலாக டிஜிட்டல் மீட்டர் மாற்றி பொருத்தப்படும்.