லெபனான்: வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வந்த டீத்தூளை தனது பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு கொடுத்த அதிபர்

லெபனான் வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வந்த டீத்தூளை (தேயிலைத்தூள்) அந்நாட்டு அதிபர் தனது பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு கொடுத்துள்ளார்.
பெய்ரூட் விபத்து
பெய்ரூட் விபத்து
Published on

பெய்ரூட்:

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 190-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். லெபனான் நாட்டின் வரலாற்றில் இந்த வெடிவிபத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு, உறவுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு பிரான்ஸ், இந்தியா உள்ளபட உலகின் பல நாடுகள் பல்வேறு உதவிகளை செய்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை பல நாடுகள் அளித்தன.  

இந்நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்லவேண்டிய நிவாரணப்பொருளை லெபனான் அதிபர் மைக்கில் அரோன் தனது பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு வழங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.  

லெபனான் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கை தனது நாட்டில் இருந்து 1,675 கிலோ கிராம் அளவில் உயர்ரக டீத்தூளை (தேயிலைத்தூள்) வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முன்வந்தது.

லெபனானுக்கான இலங்கைத்தூதர் கடந்த 24 ஆம் தேதி அதிபர் மைக்கிலிடம் இந்த தேயிலைத்தூளை வழங்கியதாக புகைப்படத்துடன் லெபனான் அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டது.

ஆனால், லெபனான் அதிபர் மாளிகை நேற்று வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில், இலங்கை அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட டீத்தூளை ராணுவம் பெற்றுக்கொண்டதாகவும், இவை அதிபர் மைக்கிலின் பாதுகாவளர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், டீத்தூளை அன்பளிப்பாக வழங்கிய இலங்கை அதிபருக்கு லெபனான் அதிபர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசால் நிவாரணமாக வந்த டீத்தூளை தனது பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு வழங்கியது தொடர்பாக பொதுமக்களும், எதிர்கட்சிகளும் அதிபர் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பாக ’டீதிருடன்’ என்ற ஹேஸ்டேக் லெபனானின் சமூகவலைதளங்களில் டிரண்ட் ஆக மாறியது. சமூகவலைதளவாசிகள் இந்த ஹேஸ்டேக் மூலம் லெபனான் அதிபரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com