

ராமேசுவரம் தங்கச்சி மடம் பேய்க்கரும்பு கிராமத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் உள்ளது.
இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.50 கோடி மதிப்புள்ள மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்கட்டாக ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதன் திறப்பு விழா அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்க இருப்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தனுஷ்கோடி, பாம்பன் பாலம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். மணி மண்டபத்தின் இறுதிக்கட்ட பணிகளை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டமும் கலெக்டர் தலைமையில் நடந்தது. மணிமண்டபத்தின் அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகள், விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.
அப்துல்கலாம் மணி மண்டபத்தை திறந்து வைக்க வரும் பிரதமர் மோடி ரூ.50 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ராமேசுவரம் முகுந்தநாயர் சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான கடற்கரையோர சாலையையும் திறந்து வைக்கிறார்.
மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிற மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கவர்னர்கள், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதற்கான முறைப்படியான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.
மணிமண்டப திறப்பு விழா அன்று, நினைவிட வளாகத்தில் கண்காட்சி அமைக்கப்படுகிறது. அதில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு இஸ்ரோ மற்றும் பாதுகாப்புத் துறையில் அவர் பணியாற்றிய புகைப் படங்கள் இடம் பெறுகிறது.