ஆண்டிப்பட்டி அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் கைது

ஆண்டிப்பட்டி அருகே தனியார் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு சொந்தமான சொகுசு பங்களா மயிலாடும்பாறை பகுதியில் உள்ளது. இந்த பங்களா முன்பு 7 ஆண்டுகள் வளர்ந்த 2 சந்தன மரங்கள் இருந்தன. இந்த மரங்களை சம்பவத்தன்று மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்று விட்டதாக மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் மேலாளர் பூபதிராஜா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

விசாரணையில் வரு‌ஷநாடு அருகே உள்ள காந்தி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 55), ராஜா (50), தர்மராஜபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (55) ஆகிய 3 பேரும்தான் சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த மரம் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com