திருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.
திருப்பதி கோவில்
திருப்பதி கோவில்
Published on

திருமலை:

திருப்பதியில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. நேற்று இலவச தரிசனத்திற்கு 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியதாவது:-

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளையை (ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆலய நிர்மாண அறக்கட்டளை) ஏற்படுத்தி, நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அர்ச்சகர்கள், நித்திய பூஜைகள் உள்ளிட்டவற்றுக்காக இந்த அறக்கட்டளையை கடந்த 3 ஆண்டுக்கு முன் தேவஸ்தானம் ஏற்படுத்தியது.

அறக்கட்டளை குறித்து பக்தர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேவஸ்தானம் நேற்று முதல் புதிய நடைமுறையை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் ஒரு வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் திருமலையில் உள்ள கோகுலம் விருந்தினர் மாளிகையில் செயல்பட்டு வரும் தேவஸ்தானம் கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் வந்து அங்குள்ள கவுண்ட்டரில் ரூ.10 ஆயிரம் வழங்கினால், அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான வி.ஐ.பி. பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும்.

அதற்காக டிக்கெட்டுக்கான கட்டணம் ரூ.500 செலுத்தி அவர்கள் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.99 ஆயிரம் வரை நன்கொடை வழங்குபவர்களுக்கு, இந்த பிரிவின் கீழ், 9 டிக்கெட்டுகள் வரை வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.

தற்போது நேரடியாக வழங்கப்படும் இந்த டிக்கெட்டுகள், அதன்பின் ஆன்லைன் மூலம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது.

அடுத்த மாதம் முதல் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே இந்த திட்டத்துக்கான டிக்கெட் கோட்டா பற்றி முன்னதாகவே அறிவிப்பு வெளியிடப்படும். இந்த புதிய நடவடிக்கை மூலம் இடைத்தரகர்களை கட்டுப்படுத்தி, சாதாரண பக்தர்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க  முடியும் என்றார்.

இத்திட்டத்தின்கீழ் முதல் பக்தராக சென்னையை சேர்ந்த ராமையா குடும்பத்தினர் ரூ.40 ஆயிரம் செலுத்தி 4 டிக்கெட்டுகளை பெற்று தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com