

வியர்வை அதிகமாக வெளியேறும்போது உடலில் உள்ள உப்புச்சத்தின் அளவு குறைய தொடங்கி விடும். வியர்வையாக வெளியேறும் நீரை ஈடு செய்ய வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவது கூடாது. அதனுடன் உப்புச்சத்தின் அளவையும் ஈடு செய்ய வேண்டும். அதற்கு தண்ணீருடன் சிறிதளவு உப்பையும் சேர்த்து அருந்த வேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதனுடன் உப்பு சேர்த்தும் குடித்து வரலாம்.
அது உடலில் இருந்து வெளியேறிய நீரையும், உப்புச்சத்தையும் ஈடுகட்டும். கோடை காலத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர் களுக்கு வியர்வை வெளியேற்றம் அதிகமாகும்போது சோர்வு அதிகம் ஏற்படும். தாகம் எடுத்தாலும் அதனை சொல்ல தெரியாமல் தவிப்பார்கள். அவ்வப்போது தண்ணீருடன் சிறிது உப்பு கலந்து பருக கொடுக்கலாம்.
தண்ணீரை நன்கு காய்ச்சி கொடுப்பது நல்லது. குழந்தைகள் காற்றோட்டமான சூழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். காற்றோட்டம் குறைவாக இருந்தால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டு குழந்தை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கோடை காலம் முடியும் வரையில் அவ்வப்போது எண்ணெய் தேய்த்து குழந்தைகளை குளிப்பாட்டி வருவது நல்லது. அதிலும் எண்ணெய்யை காய்ச்சி, ஆறவைத்து உடலெங்கும் தேய்த்து குளிப்பாட்டி வரலாம். மஞ்சளை அரைத்து உடலில் தேய்த்து வருவதும் தொற்று நோயில் இருந்து காக்கும். குழந்தைகளுக்கு ஏதாவது நோய் பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடல் உஷ்ண பாதிப்பாக நினைத்து சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது டைபாய்டு, ப்ளூகாய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல் களின் அறிகுறியாக இருக்கலாம்.