அன்பே டயானா- திரை விமர்சனம்
அன்பே டயானா- திரை விமர்சனம்(3 / 5)
கதை
சிறுவர்களுக்கு தடகள பயிற்சி தரும் பாரி இளவழகன், ஆங்கிலோ இந்தியனான ரம்யா ரங்கநாதனை கல்லூரி காலம் முதலே காதலித்து வருகிறார். இதற்கிடையில் ரம்யாவுக்கும் காதல் மலருகிறது.
ஆனால் எதற்கெடுத்தாலும் 'இவங்க நம்மாளுகளா...' என கேட்கும் தனது தாய் ரோஜாவுக்கு பயந்து, காதலை வீட்டில் சொல்லாமல் தவித்து வருகிறார். இதற்கிடையில் பாரி இளவழகனுக்கு பெண் பார்த்து பேசி முடிக்கிறார் ரோஜா.
இதையடுத்து தந்தை சேத்தன் உதவியுடன் ரோஜாவை ஒருவழியாக சமாதானம் செய்யும் பாரி இளவழகன், ரம்யா வீட்டுக்கு குடும்பத்தினரை அழைத்து செல்கிறார். ரம்யாவின் தந்தையை பார்க்கும் சேத்தன் 'டென்ஷன்' ஆகி, இந்த திருமணம் நடக்காது என்று கூறி விடுகிறார்.
சேத்தனுக்கும், ரம்யாவின் தந்தைக்கும் அப்படி என்ன முன்பகை? பாரி இளவழகன் - ரம்யா காதல் கைகூடியதா? அல்லது தாய் பேசி வைத்திருக்கும் பெண்ணை மணமுடித்தாரா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு கலகலப்பாக பதில் சொல்கிறது மீதி கதை.
நடிகர்கள்
'ஜமா' படத்தில் கவனம் ஈர்த்த பாரி இளவழகன், இந்தமுறை காதல், காமெடி என கலக்கியிருக்கிறார். நடிப்பில் தேறி இருக்கிறார்.
தமிழ், ஆங்கிலம் கலந்து பேசும் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக கவனம் ஈர்க்கிறார், ரம்யா ரங்கநாதன். குட்டை டிரவுசரிலும் வந்து கிளுகிளுப்பூட்டுகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் ரோஜா, நடிப்பில் வெளுத்து வாங்கியுள்ளார். அவரது 'டார்க் காமெடி'களும் ரசிக்க வைக்கிறது.
ரோஜாவின் கணவராக நடித்திருக்கும் சேத்தன் நடிப்பு அசத்தல். பாரி இளவழகனின் நண்பராக வரும் 'பரிதாபங்கள்' கோபியின் காமெடி கலக்கல்.
செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி என அனைவருமே பொருத்தமான தேர்வு.
ஒளிப்பதிவு-இசை
ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவும், பரத் சங்கரின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.
கலகலப்பான காட்சிகள் பலம். மெதுவாக நகரும் திரைக்கதை பொறுமையை சோதிக்கிறது. லாஜிக் மீறல்களும் அதிகம். காதல் காட்சிகளில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம்.
எது எப்படியோ, கலகலப்பான காட்சிகள் மூலம் படத்தை நகர்த்தி சென்று கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் பாரி இளவழகன்.
அன்பே டயானா - மெதுவான கானா.

