

ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் 300-வது படம் ‘அர்ஜூனன் பேர் பத்து’. படத்தில் கதாநாயகியாக அனாமிகா மாஹி, காளிவெங்கட், அருள்தாஸ், மைனா நந்தினி, சுப்பிரமணிய சிவா, லெனின் பாரதி, சென்ட்ராயன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். தங்கபாண்டி, கிருத்திகா தங்கபாண்டி தயாரித்துள்ள இந்த படம் வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் யோகிபாபு பேசியதாவது:-
300-வது படம் நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ள கூடாது. இது பத்தாது நாகேஷ், மனோரமா அந்த லெவலில் போகணும் என ஆசைப்படுகிறேன். 2016-ம் ஆண்டிலேயே நயன்தாராவுடன் நடித்து விட்டேன். எந்த ஹீரோயினுடன் நடிக்கவில்லை என்றாலும் அதை பற்றி கவலை இல்லை. கதைதான் நமக்கு முக்கியம்.
அனாமிகா என்னுடன் நடித்ததற்கு நன்றி. எங்க பூர்வீகம் ஆற்காடு பக்கம் உள்ள கிராமம். நாங்க பிறந்தது எல்லாமே சென்னை. நாங்க சென்னைவாசிதான். வெளியூரில் இருந்து வந்துட்டா மட்டும் இங்க வாய்ப்பு ரொம்ப கஷ்டம் கிடையாது. சென்னையில் பிறந்தவங்களுக்கு ரொம்ப கஷ்டம். நான் அதை இந்த 24 வருடம் அனுபவப்பட்டு இருக்கிறேன். நிறைய டைரக்டர்களுக்கு உதவி செய்வதற்கு நான் ரெடியாக இருக்கிறேன் என பேசினார்.
தொடர்ந்து அவரிடம் 300 படங்களில் நடித்துள்ளீர்கள். நீங்கள் சேர்ந்து நடிக்காத நடிகர்கள் யாரும் இருக்கிறார்களா? யார் கூட சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்று பெண் தொகுப்பாளினியின் கேள்விக்கு உங்ககூட சேர்ந்துதான் நடிக்க வேண்டும் என்று நகைச்சுவையாக பதில் அளித்ததுடன் கமல்ஹாசனுடன் மட்டும் தான் நடிக்கவில்லை. விரைவில் நடக்கும் என நினைக்கிறேன்.
அடுத்ததாக 300 படங்கள் நடித்ததற்கு உங்க தெய்வ பக்தியும் காரணமா? என்ற கேள்விக்கு, தெய்வபக்தி என்பது எல்லோரும் கும்பிட்டுட்டு இருக்காங்க நான் முருகனை வேண்டுகிறேன். எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கு. அதனால் கடவுள் என்னை காப்பாற்றுகிறார். அவ்வளவுதான் காமெடிதான் எனக்கு சோறு போட்டது என பதில் அளித்தார்.