"என் வாழ்நாளின் மிகப்பெரிய கவுரவம்!"-பாடகி ஜானகி மறைவுக்கு நடிகை த்ரிஷா இரங்கல்!

"உங்களின் தெய்வீகக் குரல் இந்த உலகத்தில் என்றென்றைக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்"
Trisha Expresses Condolences of Singer Janaki
Published on

தென்னிந்தியத் திரையுலகின் 'இசைக்குயில்' என்று அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88). வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். அவரது மறைவுக்கு இந்தியத் திரை உலகமே தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், நடிகை த்ரிஷா கிருஷணன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களில், ஜானகி அம்மாவுடன் இருக்கும் அரிய புகைப்படங்களைப் பகிர்ந்து, கண்ணீர் மல்க வெளியிட்ட இரங்கல் செய்தி ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"உங்கள் பெயரைச் சுமப்பதே என் வாழ்நாளின் கௌரவம்!"

விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற '96' திரைப்படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரத்திற்கு 'ஜானகி' (ஜானு) என்று பெயரிடப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் ஜானகி அம்மாவின் தீவிர ரசிகையாகவும், அவரது பாடல்களைப் பாடும் பெண்ணாகவும் த்ரிஷா நடித்திருந்தார்.

இதைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள த்ரிஷா, "என்னுடைய மிகச் சிறந்த, சிறப்பான திரைப்படங்களில் ஒன்றில் உங்களது உன்னதமான பெயரை எனது கதாபாத்திரத்தின் பெயராக (ஜானு) நான் கொண்டிருந்ததை, என் வாழ்நாளின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்றாக என்றென்றும் கருதுவேன்" என நெகிழ்ந்துள்ளார்.

வெறும் திரைப் பெயர் என்பதையும் தாண்டி, ஜானகி அம்மாவுடன் நேரில் பழகிய நினைவுகளையும் த்ரிஷா பகிர்ந்துள்ளார். "திரையில் உங்கள் பெயரைச் சுமந்ததை விட, நிஜ வாழ்க்கையில் உங்களை நேரில் அறிந்துகொண்டதும், என் மீது நீங்கள் காட்டிய அளவற்ற அன்பைப் பெற்றதும் நான் என் வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கும் மிக முக்கிய நினைவுகளாக இருக்கும்.

'உங்களின் அரவணைப்பு, கனிவு மற்றும் அந்தப் புன்னகையை என்னால் மறக்க முடியாது" என்று உருகியுள்ளார். தொடர்ந்து தனது பதிவில், "மிகச்சிறந்த மாபெரும் கலைஞர்கள் எப்போதும் எவ்வளவு எளிமையான உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை எனக்கு மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி ஜானகி அம்மா.

உங்கள் உடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும், உங்களின் தெய்வீகக் குரல் இந்த உலகத்தில் என்றென்றைக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்; நிலைத்திருக்கும். அமைதியாக இளைப்பாறுங்கள், உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்" எனத் த்ரிஷா மிக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

'96' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, பாடகி எஸ்.ஜானகி ஒரு முக்கியக் காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால், படத்தின் நீளம் கருதி இறுதிக்கட்டத் தொகுப்பில் அந்தத் துண்டுக்காட்சி நீக்கப்பட்டது. தற்பொழுது த்ரிஷா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அந்தப் படப்பிடிப்பு தளத்தில் ஜானகி அம்மா த்ரிஷாவை வாஞ்சையோடு அரவணைத்த போது எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com