தனுஷ் நடிக்கும் 'ஓம்' படத்தில் இணையும் நசிருதீன் ஷா: 26 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு வருகை!

இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான 'ஹே ராம்' திரைப்படத்தில் மகாத்மா காந்தி வேடத்தில் நடித்திருந்தார்.
Naseeruddin Shah-om movie
Published on

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரித்து நடிக்கும் 'ஓம்' திரைப்படத்தின் நட்சத்திரப் பட்டாளம் தற்போது மேலும் பிரம்மாண்டமாக மாறியுள்ளது. இப்படத்தில் இந்திய திரையுலகின் மூத்த முன்னணி நடிகரான 'நசிருதீன் ஷா'முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நசிருதீன் ஷா கடைசியாக கடந்த 2000-ஆம் ஆண்டு கமல் ஹாசன் இயக்கத்தில் வெளியான 'ஹே ராம்' திரைப்படத்தில் மகாத்மா காந்தி வேடத்தில் நடித்திருந்தார். அதுவே அவரது முதல் தமிழ் படமாகும். தற்போது 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் 'ஓம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குத் திரும்புகிறார்.

கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 'பொந்தன் மாட' திரைப்படத்தில் நசிருதீன் ஷா மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் 'மம்மூட்டி' இணைந்து நடித்திருந்தனர். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இருவரும் 'ஓம்' படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

தனுஷ், மம்மூட்டி, நசிருதீன் ஷா ஆகியோருடன் இணைந்து சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஆகியோரும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

'அமரன்' பட புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவையும், கலைவாணன் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

இத்திரைப்படம் வரும் 'அக்டோபர் 16' அன்று நவராத்திரி பூஜை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படமும் (அக்டோபர் 15) வெளியாக உள்ளதால், பாக்ஸ் ஆபீஸில் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com