

பழம்பெரும் பாடகி ஜானகி மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்யவதி தம்பதிகளுக்கு 23 ஏப்ரல் 1938 இல் பிறந்த எஸ்.ஜானகி சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார்.
நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார்.
1957ம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கணி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார்.
தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
நான்கு முறை தேசிய விருதுகள் பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார்.
இந்த நிலையில், இன்று வயது மூப்பு காரணமாக ஜானகி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் தத்தமது இரங்கலை சமூக வலைத்தளம் வாயிலாக பதிவு செய்துள்ளனர்.
ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,
"தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் " என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தன் எக்ஸ் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,
“பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல் இருவர் நடித்த படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களை ஜானகி அம்மா பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.