"ஒரு தாயிடம் விளையாடாதீர்கள்"-மகள்களை கேலி செய்தவர்களுக்கு குஷ்பு எச்சரிக்கை; ராதிகா ஆதரவு!

"தன் குட்டிகளை"தன் குட்டிகளைப் பாதுகாக்கும் ஒரு காயம்பட்ட புலி நான். இனி பொறுத்துக்கொள்ள முடியாது, போதும்"
Khushbu Sundar warning to those mocking her daughters
Published on

சமூக வலைத்தளங்களில் தங்களது மலிவான விளம்பரத்திற்காக தனது மகள்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வரும் நபர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவிட்டுள்ளார்.

"இனிமேலும் என் குடும்பத்தின் மீது வைக்கப்படும் இத்தகைய அநாகரிகமான விமர்சனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்" என்று அவர் எச்சரித்துள்ளார். அவருக்கு ஆதரவாக நடிகை ராதிகா சரத்குமாரும் குரல் கொடுத்துள்ளார்.

"காயம்பட்ட புலி நான்"

தனது குடும்பப் புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு, அவதூறு பரப்புபவர்களை நோக்கிப் பதிவிட்டதாவது:

நானும் என் கணவர் சுந்தர் சி-யும் எங்கள் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்துடனும் சுயமரியாதையுடனும் வளர்த்துள்ளோம். அவர்கள் எங்களின் பிரபல அந்தஸ்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியதில்லை. நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக, உங்களின் அழுக்கு பிடித்த, வக்கிரமான மனநிலையை நான் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல.

வெறும் இரண்டு நிமிட மலிவான விளம்பரத்திற்காகவும், வியூஸ் மற்றும் ஃபாலோயர்களைப் பெறுவதற்காகவும் பிரபலங்களின் குடும்பத்தினரை, குறிப்பாகப் பெண்களைக் குறிவைக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு எனது கண்டனங்கள். "ஒரு தாயிடம் விளையாடாதீர்கள்". தன் குட்டிகளைப் பாதுகாக்கும் ஒரு காயம்பட்ட புலி நான். இனி பொறுத்துக்கொள்ள முடியாது, போதும்.

ராதிகா சரத்குமார் ஆதரவு:

குஷ்புவின் இந்த ஆவேசப் பதிவிற்கு ஆதரவாக, மூத்த நடிகை ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்:

"கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கான உரிமம் அல்ல. விமர்சனம் என்பது கொடூரமாக இருக்கக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் அவமானப்படுத்தக் கூடாது. ஒரு பிரபலமான பெண்ணின் மகள்களைக் கேலி செய்வது நகைச்சுவை அல்ல; அது அப்பட்டமான கோழைத்தனம்.

ஒருவருடைய தோற்றம் என்பது சாதனையோ அல்லது தோல்வியோ அல்ல, அவர்களின் குணமே முக்கியம். ஒரு பெண்ணை விமர்சிக்கலாம், ஆனால் அவளுடைய குழந்தைகளை கேலி செய்வது நாகரிகம் அல்ல.

அது ஒரு சமூகத்தின் ஒழுக்கத் தோல்வி. நான் குஷ்பு மற்றும் அவரது மகள்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்." இதற்காக குஷ்பு, தனது தோழியும் குடும்பத்தினருமான ராதிகாவிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு குஷ்புவின் இளைய மகள் ஆனந்திதா, நேர்காணல் ஒன்றில் தான் சிறுவயதிலிருந்தே எதிர்கொண்ட இணைய வழித் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

சமீபத்தில் தன்னைத் திருநங்கையோடு ஒப்பிட்டுப் பலர் கேலி செய்வதாகவும், அது தன்னை காயப்படுத்துவது மட்டுமன்றி, அத்தகைய கருத்துக்கள் சமூகத்தின் அறியாமையையும் திருநங்கைகளுக்கு எதிரான பாரபட்ச மனநிலையையும் காட்டுகிறது என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

23 வயதான ஆனந்திதா சுந்தர், மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 2', 'தக் லைஃப்' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் 'டபுள் ஆக்குபென்சி' என்ற வெப் சீரிஸ் மூலம் கிரியேட்டிவ் புரொடியூசராக அறிமுகமாகி, தற்போது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளத்தில் எல்லையை மீறும் ட்ரோல்களுக்கு எதிராக குஷ்பு மற்றும் ராதிகா எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவு, சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com