பெற்றோர் கொடுத்த பாசிட்டிவ் எனர்ஜி: மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

"எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்பது உண்மைதான். அதைப்பற்றி பிறகு யோசிப்பேன்"
Jason Sanjay
Published on

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமும், தமிழக முதலமைச்சருமான தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'சிக்மா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தனது திரைப்பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த ஆக்ஷன்-ஹீஸ்ட் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ஜேசன் சஞ்சய் அண்மையில் மனம் திறந்துள்ளார்.

தனது சினிமா பிரவேசம் குறித்துப் பேசிய ஜேசன் சஞ்சய், "நான் சினிமாவில் நுழைவது குறித்து எனது பெற்றோர் (விஜய்-சங்கீதா), தங்கை மற்றும் எனது நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் அனைவரும் மிகவும் நேர்மறையாக பதிலளித்து, எனக்குள் பெரிய எனர்ஜியை உருவாக்கினார்கள்.

அப்போதுதான் அவர்கள் என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை என்னால் முழுமையாக உணர முடிந்தது. 'சிக்மா' படத்தின் படப்பிடிப்பு தளம் கண்டபோது, முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் நேரில் வந்து எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்" என்றார்.

திரைப்படக் குடும்ப பின்னணியில் இருந்து வந்ததால், சிறு வயது முதலே படப்பிடிப்பு தளங்களுக்குச் செல்லும் வாய்ப்பு சஞ்சய்க்கு கிடைத்துள்ளது. "சிறுவயதில் இருந்தே பிரீமியர் ஷோக்களில் நிறைய படங்கள் பார்ப்பதுதான் என் மிகப்பெரிய பொழுதுபோக்கு. இப்போது நாம் அனைத்து வகையான உலகத் திரைப்படங்களையும் பார்க்கும் சூழல் உள்ளது.

நான் எப்போது படம் பார்த்தாலும், அதன் கதை நகர்த்தப்படும் விதம், தொடக்கம் மற்றும் திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை உற்று கவனிப்பேன். அது எனக்கு ஒரு விளையாட்டு போன்றது. படம் பார்த்து முடித்ததும் என் நண்பர்களிடம் ஓடிச்சென்று, அந்த கதையை மிகுந்த ஆர்வத்துடன் விவரிப்பேன். அங்குதான் ஒரு Storyteller எனது பயணம் தொடங்கியது" என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அல்போன்ஸ் புத்திரன் வாய்ப்பை மறுத்தது ஏன்?

பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தன்னை நடிக்க அணுகியது குறித்தும் சஞ்சய் விளக்கம் அளித்துள்ளார். "அல்போன்ஸ் புத்திரன் ஒரு மாபெரும் இயக்குநர். அவர் என்னை ஹீரோவாக நடிக்க அணுகியபோது, சினிமாவில் கேரியரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் இல்லை. எனக்குள் இருக்கும் திறமை என்ன, நான் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் எனக்குள் தேடல் இருந்தது.

அதனால், அந்த வாய்ப்பை ஏற்கும் நிலையில் நான் இல்லை. ஒருவேளை கதையைக் கேட்டுவிட்டு 'வேண்டாம்' என்று சொல்லியிருந்தால் அது தவறாக இருந்திருக்கும். அதனால்தான், 'என்னை விட ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட் உங்களுக்குக் கிடைப்பார்' என்று அவரிடம் கூறிவிட்டேன். இருப்பினும், என்னை ஒரு ஹீரோவாக அவர் நினைத்ததே எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது."

காதல் கதை அல்ல... அதிரடி ஹீஸ்ட் மூவி!

சஞ்சய்யின் வயதைக் கணக்கில் கொண்டு, அவர் தனது முதல் படத்தில் ஒரு காதல் கதையைத்தான் கையாள்வார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சஞ்சய் முற்றிலும் மாறுபட்ட ஒரு முடிவை எடுத்துள்ளார்.

"இரண்டு பேருக்கு இடையிலான காதல் கதையை இயக்குவதை விட, ஒரு பெரும் கேங்கைக் கொண்டு ஒரு அட்வென்சர் ஹீஸ்ட் படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. இந்த கதைக்கு எங்களது முதல் சாய்ஸ் நடிகர் 'சந்தீப் கிஷன்' தான். நான் சொன்ன கதையும், கேரக்டரும், திரைக்கதையும் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால் உடனடியாக ஓகே சொல்லிவிட்டார்."

நடிப்பு குறித்து சஞ்சய்யின் தற்போதைய முடிவு:

ரசிகர்கள் பலரும் ஜேசன் சஞ்சய்யை திரையில் எப்போது ஹீரோவாகப் பார்க்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசியுள்ளார்.

"எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்பது உண்மைதான். படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களுக்கு காட்சிகளை விவரிக்கும் போது அது வெளிப்படும். ஆனால், நடிப்புப் பக்கமாக கவனம் செலுத்துவதைப் பற்றி 'சிக்மா' திரைப்படம் வெளியான பிறகே யோசிப்பேன்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com