மலேசியாவில் 'ஜெயிலர் 2' ஆடியோ லாஞ்ச்? - 'ஜனநாயகன்' பாணியில் நடத்த படக்குழு திட்டம்?

'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் நீண்ட காலம் உள்ளது.
Jailer 2 audio launch soon
Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து ஒரு பிரம்மாண்டமான தகவல் இன்று சினிமா வட்டாரங்களில் பரவி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசை வெளியீட்டை இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் வகையில் வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மலேசியாவைத் தேர்ந்தெடுக்கும் படக்குழு..

சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள பிரம்மாண்ட ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மிக விமரிசையாக நடத்தப்பட்டது. இது உலகளாவிய அளவில் மிகப்பெரிய விளம்பரத்தையும், வணிக ரீதியான மாஸ் ஓப்பனிங்கையும் படத்திற்குப் பெற்றுத்தந்தது.

தற்போது அதே பாணியைப் பின்பற்றி, சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர் 2' ஆடியோ லான்ச்சையும் மலேசியாவிலேயே நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். மலேசியாவில் ரஜினிகாந்திற்கு இருக்கும் அசுரத்தனமான ரசிகர் கூட்டமும், சர்வதேச சந்தையும் இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்தின் இறுதி முடிவிற்காகக் காத்திருப்பு..

மலேசியாவில் விழாவை நடத்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் தரப்பில் முழு திட்டங்கள் தயாராக இருந்தாலும், இதற்கான இறுதி ஒப்புதலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

வெளிநாட்டுப் பயணம், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவரது தற்போதைய கால்ஷீட் தேதிகளைப் பொறுத்தே இந்த மலேசியப் பயணம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரிலீசுக்கு இன்னும் காலம் உள்ளதால் நிதானம்..

'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் நீண்ட காலம் உள்ளது. ஆரம்பகட்டப் பணிகள் மற்றும் கதைக் களம் அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருவதால், இசை வெளியீட்டு விழா குறித்த திட்டங்களை இறுதி செய்ய படக்குழுவிற்கு தாராளமாக நேரம் உள்ளது.

எனவே, அவசரப்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, இன்னும் சில மாதங்கள் கழித்தே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com