

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் தனுசின் சகோதரி மகன் பவிஷ் நாராயணன், நாக துர்கா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘லவ் ஓ லவ்’. சினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் சார்பில் பி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
நாளை (10-ந்தேதி) படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடந்தது.
விழாவில் கஸ்தூரி ராஜா பேசியதாவது:-
என்னோட குழந்தைகள் சினிமாவுக்கு வரக்கூடாது என ரொம்பவே நினைத்தேன். பிரிவ்யூ காட்சிகளுக்கு கூட பசங்கள கூட்டிட்டுப் போக மாட்டேன்.
செல்வராகவன் ரொம்ப நல்லா மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிச்சிட்டு இருந்தார். ஆனால், 2வது ஆண்டில் திடீரென ஒருநாள் வந்து இதற்கு மேல் சினிமா தான் என்றார்.
எனக்கு எளிதில் கோபம் வந்துவிடும். ஆனால், அன்று அவரை திட்டவில்லை. பட்டம் வாங்கிட்டு வா சினிமாவில் சேர்த்து விடுகிறேன் என்றேன். அவரும் பட்டம் வாங்கிட்டு வந்து சினிமா என்றார்.
பலரிடம் உதவி இயக்குனராக செல்வராகவனை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டேன். நீங்களே பெரிய டைரக்டர் உங்கள் மகனை எப்படி அசிஸ்டெண்ட் டைரக்டராக வைத்துக் கொள்ள முடியும் என்றனர்.
அடுத்ததாக பாலச்சந்தரிடம் சேர்த்து விட்டேன். அப்போதும் அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப நினைத்தேன். ஆனால், காதல் கொண்டேன் படத்தை இயக்கி இன்று இவ்வளவு பெரிய இயக்குநராக மாறுவார் என அப்போது நான் நினைக்கவே இல்லை என்றார்.
இளைய மகன் தனுசுக்கு சினிமாவே பிடிக்காது. ஆரம்பத்தில் ஒரு 5 படங்கள் வரை அழுதுகிட்டே தான் நடிப்பான். ஷூட்டிங் போகவே பிடிக்காது. அதன் பின்னர் தான் சினிமாவை புரிந்துக் கொண்டு இன்று நடிகராகவும், இயக்குநராகவும் கலக்கி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.