ஐ நோபடி (I Nobody) - திரை விமர்சனம்
ஐ நோபடி (I Nobody) - திரை விமர்சனம்(3 / 5)
கதை
வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு பல படங்கள் வந்திருந்தாலும், அதில் சிக்கிக் கொள்ளும் ஒரு சாதாரண குடும்பஸ்தனின் வாழ்க்கையை மையப்படுத்தி வித்தியாசமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நிஷாம் பஷீர்.
பிரித்விராஜ், பார்வதி திருவோத்து மற்றும் அவர்களது இரு மகள்களுடன் அமைதியாக வாழும் குடும்பத் தலைவர். ஒரு நாள் வங்கியில் நடந்த எதிர்பாராத கொள்ளை சம்பவம் அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் மாயமாக, சந்தேகத்தின் பார்வை பிரித்விராஜ் மீது விழுகிறது. போலீஸ் விசாரணை, ரவுடி கும்பலின் மிரட்டல், குடும்பத்தில் பிரச்சனை என அடுத்தடுத்து வரும் சம்பவங்கள் பரபரப்பை கூட்டுகின்றன.
நடிகர்கள்
பிரித்விராஜ் வழக்கமான ஹீரோயிசம் இல்லாமல், பயம், பதற்றம், இயலாமை ஆகிய உணர்வுகளை உடல்மொழியால் மிக நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். அதிக வசனங்கள் இல்லாமலேயே அவரது நடிப்பு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறது. பார்வதி திருவோத்து, கணவரின் செயல்களால் சிக்கலில் தவிக்கும் மனைவியாக உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கி கவனம் ஈர்க்கிறார்.
போலீஸ் கான்ஸ்டபிளாக எதிர்மறை கதாபாத்திரத்தில் ஹக்கீம்ஷாஜகானும் உடல்மொழி மற்றும் கண் அசைவுகளால் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்தின் பலம்
இயக்குநர் நிஷாம் பஷீர், வங்கி கொள்ளை கதையை வெறும் போலீஸ்-கொள்ளையர் மோதலாக இல்லாமல், குடும்ப உறவுகள், மன அழுத்தம், சந்தேகம் ஆகியவற்றுடன் இணைத்து சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார். சில இடங்களில் திரைக்கதை சற்று மெதுவாக நகர்ந்தாலும், கிளைமாக்ஸ் வரை சஸ்பென்சை தக்க வைத்திருப்பது படத்தின் பலம்.
மொத்தத்தில், ‘ஐ நோபடி’ பரபரப்பும், குடும்ப உணர்வுகளும் கலந்த வித்தியாசமான கிரைம் திரில்லர்.

