3-வது முறை தேசிய விருது வென்றார் ஜி.வி.பிரகாஷ்: நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

"ஒட்டுமொத்தமாக நமது குடும்பம் இணைந்து வாங்கும் 10-வது தேசிய விருது இது"
 A.R.Rahman-GV Prakash
Published on

மத்திய அரசு அறிவித்துள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது மூன்றாவது தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'அமரன்' திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசை பிரிவில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தருணத்தில், அவரது மாமாவும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மருமகனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் நெகிழ்ச்சியான பதிவு:

ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், "உன்னுடைய 3-வது தேசிய விருதுக்கு வாழ்த்துகள் ஜி.வி.பிரகாஷ். ஒட்டுமொத்தமாக நமது குடும்பம் இணைந்து வாங்கும் 10-வது தேசிய விருது இது என்பதால், எங்கள் குடும்பத்திற்கு இது மிகவும் பெருமையான தருணம்.

இசையின் மீதான உனது ஆர்வம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு எப்போதுமே ஊக்கமளிப்பதாக உள்ளது. நீ இன்னும் பல மைல்கற்களை எட்ட வாழ்த்துகிறேன். இறைவன் ஆசீர்வதிக்கட்டும்," என்று பதிவிட்டுள்ளார். மேலும், தனது வழக்கமான தாரக மந்திரமான 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்ற வார்த்தைகளுடன் இந்த வாழ்த்தை அவர் நிறைவு செய்துள்ளார். இதற்கு ஜி.வி. பிரகாஷ், "லவ் யூ சார்" என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் தேசிய விருதுப் பயணம்:

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக தேசிய விருது மேடையில் ஏறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான முதல் தேசிய விருது பெற்றார். அதனைதொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த பாடல்களுக்கான இசையமைப்பாளர் விருது பெற்றார்.

ரஹ்மான் குடும்பத்தின் 10 தேசிய விருதுகள்:

ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டது போல, இவர்களது இசைக்குடும்பம் இதுவரை மொத்தம் 10 தேசிய விருதுகளை வென்று இந்தியத் திரையுலகில் அசைக்க முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் மட்டும் தனியாக 7 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். ஜி.வி. பிரகாஷின் 3 விருதுகளையும் சேர்த்தால் ரஹ்மான் குடும்பத்தின் மொத்த தேசிய விருதுகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்கிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெரும் இசை ஆளுமைகள் இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் தங்களது குடும்பத்தின் 10-வது வெற்றியாகக் கொண்டாடுவது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com