துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே இணையும் ‘DQ41’ படத்தின் தலைப்பு வெளியீடு!

இந்த படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசைமைக்கிறார்.
DulquerSalmaan  PoojaHegde
Published on

துல்கர் சல்மான் நடிப்பில், பல மொழிகளில் உருவாகி வரும் அவரது 41-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். தற்காலிகமாக 'DQ41' என்று அழைக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு 'ஸ்ரீ ஸ்ரீ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

புதிதாக அறிமுகமாகும் இயக்குனர் ரவி நெலகுடிதி இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஒரு அழகான காதல் கதையை கண்முன்னே நிறுத்துகிறது.

போஸ்டரில், துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே ஆகிய இருவரும் பள்ளி சீருடை அணிந்து, மொட்டை மாடி சுவற்றின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு கலகலப்பாகப் பேசிக்கொண்டிருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பூஜா ஹெக்டே மனமகிழ்ந்து சிரிக்க, துல்கர் வெட்கத்துடன் கீழே குனிந்து புன்னகைப்பது, இது ஒரு அழகான கேம்பஸ் காதல் கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ் கூட்டணி!

துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் 'ஸ்ரீ ஸ்ரீ'. இவர்களுடன் இணைந்து நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எஸ்.எல்.வி சினிமாஸ் போஸ்டர் கீழ் சுதாகர் செருகுரி தயாரிக்கும் இந்தத் திரைப்படம், நிறுவனத்தின் மைல்கல்லான 10-வது தயாரிப்பாகும். இப்படத்தின் முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

மிரட்டலான தொழில்நுட்பக் குழு!

நவீன காலத்து காதல் மற்றும் எமோஷனல் கதைக் களம் கொண்ட இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்ய, அவினாஷ் கொல்லா கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர்களின் அடுத்தடுத்த மாஸ் ப்ராஜெக்ட்கள்!

துல்கர் சல்மானுக்கு தெலுங்கில் 'ஆகாசம்லோ ஒக தாரா' படத்துடன் சேர்த்து 'ஸ்ரீ ஸ்ரீ' படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்த மாதம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இவரது 'ஐ அம் கேம்' திரைப்படம் வெளியாகத் தயாராகி வருகிறது.

மறுபுறம், நடிகை பூஜா ஹெக்டே 2022-ல் வெளியான 'ஆச்சார்யா' படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கு திரையுலகிற்கு முதன்மை கதாபாத்திரத்தில் திரும்பியுள்ளார். சமீபத்தில் 'ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' படத்தில் நடித்திருந்த அவர்,

அடுத்ததாக தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்துள்ளார். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' திரைப்படமும் பூஜா ஹெக்டேவின் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com