தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்: வரிசை கட்டி நிற்கும் படங்கள்!

தமிழ் சினிமாவின் மாஸ்டர்பீஸ் கூட்டணியான தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் இரண்டு புதிய திரைப்படங்கள் உருவாகவுள்ளது.
dhanush upcomming news
Published on

கோலிவுட் முதல் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை தன் நடிப்புத் திறமையால் முத்திரை பதித்த நடிகர் தனுஷ், அடுத்தடுத்து பிரம்மாண்ட இயக்குனர்களுடன் இணையவுள்ள திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் உத்தேசப் பட்டியல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

தனுஷ் நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ஓம்' திரைப்படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி உலகளவில் திரைக்கு வரத் தயாராகி வருகிறது.

'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இத்திரைப்படம், தனுஷின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகமான 'ஓம் பார்ட் 2' திரைப்படமும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'லப்பர் பந்து' திரைப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுடன் தனுஷ் கூட்டணி அமைக்கவுள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் துவங்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமின்றி, கமர்ஷியல் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் இயக்குனர் சிவாவுடன் தனுஷ் முதன்முறையாக இணையவுள்ளதாகவும், இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து வரும் ஜனவரி 2027 முதல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின்படி, தனுஷ் தனது அடுத்தடுத்த படங்களை முன்னணி இயக்குனர்களான மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து பண்ணவுள்ளார்.

இதில் மிக முக்கியமாக, தமிழ் சினிமாவின் மாஸ்டர்பீஸ் கூட்டணியான தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் இரண்டு புதிய திரைப்படங்கள் உருவாகவுள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவை தவிர, தனுஷின் தற்காலிகப் பட்டியலில் பல பிரம்மாண்ட இயக்குனர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணையும் 'DxV' திட்டம், எச்.வினோத் இயக்கும் புதிய படம், ஒரு புதிய பாலிவுட் திரைப்படம் மற்றும் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளான 'ஆயிரத்தில் ஒருவன் 2' , 'புதுப்பேட்டை 2' ஆகிய திரைப்படங்களும் பேச்சுவார்த்தையில் உள்ளன.

பல முன்னணி இயக்குனர்கள் தனுஷிடம் கதைகளை விவரித்துள்ளதால், வரும் நாட்களில் இன்னும் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com