

பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு தற்போது 60 வயது. அண்மையில் தனது நீண்ட நாள் தோழியான கௌரி ஸ்ப்ராட் என்பவரை 3வது முறையாகத் திருமணம் செய்து கொண்டார் அமீர் கான். கௌரி ஸ்ப்ராட்க்கு வயது 47.
ஒரு 47 வயது பெண்ணை 60 வயது நபர் மூன்றாவது திருமணம் செய்துகொண்டது, அதுவும் திருமண வயதில் மகன் இருக்கும்போது செய்துகொண்டது என்பது இணையத்தில் பலரின் விமர்சனத்தை ஈர்த்தது.
இந்த சூழலில் முன்னர் தன் திருமண வாழ்வில் மணமுடைந்து அமீர் கான் அழுது கண்ணீர் விட்டதாக அவருடன் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பழகி வரும் நெருங்கிய நண்பர் அமீன் ஹாஜி தெரிவித்துள்ளார்.
அமீன் கூறுகையில்,
"அமீர் கான் தனது வேலை மீது முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கக்கூடியவர். அவர் எதைச் செய்தாலும் நேர்மையாகவும் ஆர்வத்துடனும் செய்வார்.
ஆனால், அந்த அளவிற்கான வேலை அர்ப்பணிப்பு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில இழப்புகளைக் கொண்டு வந்துவிடுகிறது.
அப்படிப்பட்ட ஒருவருடன் வாழும்போது, அவருடன் வாழ்பவர் தங்களுக்கு அதிகம் கவனம் கிடைக்கவில்லை என்று சில நேரங்களில் உணரக்கூடும்.
அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காதலைக் கண்டுபிடிப்பது குறித்து மக்கள் கேலி செய்கிறார்கள்.
ஆனால், 15 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அவர் மனமுடைவை எதிர்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன். அவர் அழுததையும் நான் பார்த்திருக்கிறேன்.
வெளியே இருப்பவர்கள் நினைப்பது போல உறவுகள் அவ்வளவு எளிதானவை அல்ல. ஒரு திருமணம் முறிவதற்குக் குறிப்பிட்ட ஒரு நபர் மட்டும்தான் காரணம் என்று கருதுவது தவறானது" என்று கூறியுள்ளார்.
அமீரின் பழைய உறவுகள் குறித்து கூறுகையில் அமீன்,
பலர் ஒரு உறவு தோல்வியடைந்ததும் விரக்தியடைந்து விடுவார்கள். ஆனால் அமீர் அப்படி இல்லை. அவர் எப்போதும் திருமண பந்தத்தை கண்ணியத்துடன் நடத்தியுள்ளார்.
மக்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் கேலி செய்கிறார்கள், ஆனால் அவர் எவ்வளவு நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொண்டார் என்பதை அவர்கள் பார்ப்பதில்லை.
அவரது முன்னாள் மனைவிகளின் குழந்தைகளும் நன்றாகப் பார்த்துக்கொள்ளப்படுவதை அவர் எப்போதும் உறுதி செய்துள்ளார் " என அமீன் குறிப்பிட்டுள்ளார்.
அமீர் கானின் முதல் திருமணம் 1986இல் ரீனா தத்தா என்பவருடன் நடந்தது.
16 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண வாழ்க்கையில் ஜுனைத் மற்றும் ஈரா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
2005 'லகான்' படப்பிடிப்பின் போது கிரண் ராவை சந்தித்துத் திருமணம் செய்து கொண்டார் அமீர். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார்.
2021ல் இவர்கள் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தாலும், இன்றும் நெருங்கிய நண்பர்களாகத் தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த ஜூலை 5 கௌரி ஸ்ப்ராட்டை அமீர் கான் தனது இல்லத்தில் மிக எளிமையான முறையில் மூன்றாவது திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் திருமணத்தில் அமீரின் குழந்தைகள் ஜுனைத், ஈரா மற்றும் அவரது மருமகன் நூபுர் ஷிகாரே ஆகியோர் கலந்துகொண்டனர்.