

நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குனர் கணேஷ் விநாயகன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அருள்வான்’. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, மலைக்கிராம மக்களின் வாழ்வியலையும் பழங்குடியினக் குழந்தைகளின் கல்வி உரிமையையும் மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் தணிக்கை விவரங்கள் மற்றும் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இப்படத்திற்கு எந்தவித சென்சாரும் இன்றி ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் '17ஆம் தேதி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
‘தகராறு’ படத்திற்குப் பிறகு சுமார் 13 வருடங்கள் கழித்து நடிகர் அருள்நிதியும், இயக்குனர் கணேஷ் விநாயகனும் இத்திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் அருள்நிதியுடன் இணைந்து பிக்பாஸ் பிரபலம் ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, காளி வெங்கட், விடிவி கணேஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதில் அருள்நிதி நேர்மையான மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான 'அல்லிப்பூவே' பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 90 பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஜி.சரவணன் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாகப் பேசும் ‘அருள்வான்’ படத்தின் டிரைலரை சமீபத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டு வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தணிக்கையில் எந்த வித சென்சார் கட்டும் இல்லாமல் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால், இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.