அகில் அக்கினேனியின் 'லெனின்' திரைப்படம்: 3 நாளில் ரூ.61 கோடி வசூலித்து சாதனை!

ஒரு திரைப்பட பயணத்தில் இருக்கும் அனைவரும் ஒன்றாக வெற்றி பெறும்போதுதான் அந்தப் படம் முழுமையான வெற்றியைப் பெறுகிறது.
Akhil Akkineni's Lenin Movie
Published on

நடிகர் அகில் அக்கினேனி நடிப்பில், முரளி கிஷோர் அபுரு இயக்கத்தில் கடந்த 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'லெனின்'.

கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் முதல் 3 நாட்கள் வார இறுதி வசூல் சாதனை குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி சூரியதேவரா தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'மனம் எண்டர்டெயின்மெண்ட்ஸ்' மற்றும் 'சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' ஆகிய இரு முன்னணி நிறுவனங்களும் இணைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 'லெனின்' திரைப்படத்திற்காகக் கைகோர்த்தன.

நடிகர் அகிலுக்கு ஒரு பிரம்மாண்டமான பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுக்க வேண்டும், படத்தின் பயணத்தில் இணைந்த ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இந்தத் திரைப்படம் தொடங்கப்பட்டதாக நாக வம்சி குறிப்பிட்டுள்ளார்.

திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்டமடைவதைத் தவிர்க்க, படத்தின் தியேட்டர் வியாபாரத்தை இறுதி செய்யும்போது நடிகர் 'நாகார்ஜுனா' மற்றும் தயாரிப்பாளர் நாக வம்சி ஆகிய இருவரும் இணைந்து ஒரு முக்கிய முடிவை எடுத்தனர்.

அதன்படி, அனைத்துப் பகுதிகளிலும் படத்தின் தியேட்டர் உரிமைகளை மிகவும் நியாயமான மற்றும் பொறுப்பான விலைக்கு விற்றுள்ளனர்.

இதனால், படத்தை நம்பி வாங்கிய விநியோகஸ்தர்கள் முதல் வார இறுதியிலேயே தங்களின் முதலீட்டை முழுமையாக மீட்டெடுத்து லாபப் பாதைக்குத் திரும்பியுள்ளனர். தங்களுக்கு வெறும் பாக்ஸ் ஆபீஸ் எண்கள் மட்டுமே வெற்றி கிடையாது என்றும், கூட்டு மகிழ்ச்சியே உண்மையான வெற்றி என்றும் நாக வம்சி தெரிவித்துள்ளார்.

ஒரு திரைப்படத்தின் பயணத்தில் இருக்கும் அனைவரும் ஒன்றாக வெற்றி பெறும்போதுதான் அந்தப் படம் முழுமையான வெற்றியைப் பெறுகிறது என்றும், தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் போர்டுகளைப் பார்க்கும்போது தங்களின் நோக்கம் நிறைவேறியதாக உணர்வதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் அவர் தனது நன்றியைப் பகிர்ந்துள்ளார். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து பெரும் விவாதம் வெடித்துள்ளது.

'லெனின்' திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் உலகளவில் '61.1 கோடி ரூபாய்' வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில், சினிமா வசூலைக் கணிக்கும் முன்னணி ட்ரேடு டிராக்கர்கள் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஆய்வாளர்கள் படத்தின் 3 நாள் உலகளாவிய வசூல் சுமார் '37.07 கோடி ரூபாய்' மட்டுமே என்று குறிப்பிடுகின்றனர்.

தயாரிப்பு தரப்பு கூறும் வசூலுக்கும், திரையுலக நம்பகமான வட்டாரங்கள் கூறும் வசூலுக்கும் இடையே சுமார் 24 கோடி ரூபாய் வித்தியாசம் இருப்பது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com