50 ஆண்டு திரை உலக பயணம்- கன்னடத்து பைங்கிளியை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தது எப்படி?

சரோஜா தேவி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.50 ஆண்டு காலமாக திரைப்படத் துறையில் இவர், 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
50 ஆண்டு திரை உலக பயணம்- கன்னடத்து பைங்கிளியை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தது எப்படி?
Published on

சரோஜா தேவி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 50 ஆண்டு காலமாக திரைப்படத் துறையில் இவர், 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் 'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரசுவதி' போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார்.

'கன்னடத்துப் பைங்கிளி' - தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி. சரோஜா தேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும்.

ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜா தேவி. படம் மிகப்பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது.

தமிழில் உடனடியாக நடிக்க முடியாதபடி கன்னடப் படங்கள் அவருக்குக் குவிந்தன. 'இல்லறமே நல்லறம்' என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி. அதன் பின்னர் 2-வது கதாநாயகி வேடங்கள் கிடைக்கத் தொடங்கின.

அதே ஆண்டில் எம்.ஜி.ஆர். சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த 'நாடோடி மன்னன்' படத்தில் 'ரத்னா'வாக வந்து அலங்கரித்த சரோஜாதேவி, தமிழ் ரசிகர்கள் மனதிலும் ஊடுருவினார்.

எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் தொடங்கித் திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால்தான் பிள்ளையா, அன்பே வா உட்பட அவர் நடித்த அத்தனை படங்களும் வெற்றி பெற்றன.

சரோஜா தேவின் தமிழ்த் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பரிசென்றே கல்யாணப் பரிசு படத்தைக் கூறிவிடலாம். ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே பெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் சரோஜாதேவி. சிவாஜி கணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் என்று தொடங்கி 'புதிய பறவை'யாகக் காதலித்து அவரைக் கைது செய்ய வரும் ரகசிய ஏஜெண்டாகப் பிரமாதப்படுத்தினார்.

படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜா தேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். சரோஜா தேவி திருமணத்துக்குப் பிறகும் கணவர் பி.கே. ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் கதாநாயகியாக நடித்தார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதலில் உடைத்தெறிந்தவர்.

நாடோடி மன்னனில் நடிக்க வைக்க சரோஜா தேவியை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தது எப்படி?

சரோஜா தேவி, நாடோடி மன்னன் படத்தில் நடிப்பதற்கு முன்பாக இயக்குநர் கே.சுப்பிரமணியம் தயாரித்த "கச்ச தேவயானி" என்ற கன்னடபடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது இயக்குனர் கே.சுப்பிரமணியத்தை சந்திக்க வந்த எம்.ஜி.ஆர். அங்கே நடித்து வந்த புதுமுக நடிகையான சரோஜா தேவியை கண்டு, "யார் அந்த பெண்?" என்று இயக்குநர் கே.சுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளார்.

அவர் பெயர் சரோஜா தேவி, பெங்களூரைச் சேர்ந்தவர் என்ற பதில் அப்போது வந்துள்ளது.

அது முடிந்து எம்.ஜி.ஆர். அமைதியாக அங்கிருந்து சென்றாலும், அவரது மனதில் ஒரு திட்டம் பிறந்தது. அவர் நடிக்கஇருந்த 'திருடாதே' படத்திற்கு சரோஜா தேவியை கதாநாயகியாக தேர்வு செய்ய விரும்பினார். இதனால் சரோஜா தேவியை அழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்தப்பட்டது. பிறகு படக் குழுவினர் புதுமுகத்தை நாயகியாக கொண்டுவர குழப்பம் காட்டினாலும், எம்.ஜி.ஆர். தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் 'திருடாதே' படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் எம்.ஜி.ஆர். தனது சொந்த தயாரிப்பான 'நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவியை 2-வது கதாநாயகியாக அறிமுகம் செய்ய முடிவு செய்தார். ஆரம்பத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு இணையாக சரோஜாதேவியின் நடிப்பும் இருந்ததால் பலராலும் அவர் பாராட்டப்பட்டார். இதற்கு பிறகு இந்த கூட்டணி நாடோடி மன்னன் தொடங்கி 26 படங்களில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் கலை பொக்கிஷமாக மாறினார்கள்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com