2025 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

Published on

ஒன்பதாம் இடத்தில் ராகு பொன்பொருள் குவியும் பாரு!

மிதுன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், 26.4.2025 அன்று 9-ம் இடத்திற்கு வரப்போகிறார். அதே நேரத்தில் கேது பகவான் உங்கள் ராசிக்கு வெற்றிகள் ஸ்தானமான 3-ம் இடத்திற்கு வருகிறார். பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் ராகுவால் பலவித வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் வந்துசேரும். இந்த நேரத்தில் ராகு, சகல பாக்கியங்களையும் உங்களுக்கு வழங்குவார்.

9-ம் இடத்திற்கு வரும் ராகுவால் ஒப்பற்ற நற்பலன்கள் வரப்போகிறது. 1½ ஆண்டு காலங்கள் அங்கு சஞ்சரிக்கும் ராகுவால் தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பெற்றோரின் வாயிலாகவும், நண்பர்கள் வாயிலாகவும் போதுமான பொருளாதாரம் கிடைக்கும்.

புனித பயணங்கள் அதிகரிக்கும். கற்றவரும், மற்றவரும் பாராட்டும் விதத்தில் ஒரு நல்ல காரிமொன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சம்பள உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று அயலூரில் பணிபுரியும் சூழல் உருவாகும்.

3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முன்னேற்றத்தில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். பிள்ளைகளாலும், பிறராலும் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பாகப்பிரிவினைக்கு இதுவரை சம்மதிக்காத உடன்பிறப்புகள் இப்பொழுது சம்மதிப்பர். உங்களுக்குரிய பங்கு கைக்கு கிடைத்தாலும் அந்த இடத்தை விற்றுவிட்டு புதிய இடம் வாங்குவதிலேயே குறிக்கோளாக இருப்பீர்கள். வருமானம் வருவதில் தடை இருக்காது.

குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.04.2025 முதல் 31.10.2025 வரை)

பூரட்டாதி நட்சத்திரக் காலில் குரு சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடல் தாண்டி சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனித பயணங்கள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கொண்டு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும் கைவந்த கலையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீரென இடமாற்றம் வரலாம்.

சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)

உத்ரம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் போது, இக்காலத்தில் நிம்மதி கொஞ்சம் குறையலாம். நேசித்தவர்களிடம் கூட யோசித்து பேசும் சூழ்நிலை உருவாகலாம். குடும்பத்தில் அமைதி குறையும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் தான் ஒற்றுமை நீடிக்கும். பிறரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். சொல்லை செயலாக்கி காட்ட முடியாது. அரசு வழி சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும்.

சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)

பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் மட்டுமின்றி தொழில் மாற்றமும் உருவாகலாம். விலகி கொள்வதாக அச்சுறுத்திக் கொண்டிருந்த பங்குதாரர்களை விலக்கி விட்டு, தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். சுபச்செலவு அதிகரிக்கும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு உத்தியோகத்தில் புதிய இடத்தில் சேர முயற்சிப்பீர்கள்.

சனிப்பெயர்ச்சி காலம்

6.3.2026 அன்று மீன ராசிக்கு சனிப்பெயர்ச்சியாகி செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சனி வரும் பொழுது கர்ம ஸ்தானம் பலப்படுகிறது. எனவே பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆரோக்கிய சீர்கேடுகளும், மருத்துவச் செலவும் உண்டு. அதே நேரத்தில் தொழில் வளர்ச்சியில் இருந்த இடையூறு அகலும்.

புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அனைத்து வழிகளிலும் அனுகூலம் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும் நேரம் இது. பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

குருப்பெயர்ச்சி காலம்

ராகு- கேது பெயர்ச்சி காலத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. வருகிற 11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போது அதன் பார்வை பலத்தால் பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைபடுவீர்கள். தடைப்பட்ட திருமணம் தானாக நடைபெறும் வாய்ப்பும் உண்டு. பங்காளி பகை மாறும்.

இதுவரை உங்கள் மீது பாசம் காட்டாத பெற்றோர் இப்பொழுது பாசம் காட்டுவர். பணத்தேவை பூர்த்தியாகவும் வழிவகுத்து கொடுப்பர். குடும்ப முன்னேற்றம் கூடும். அக்டோபர் 8-ந் தேதி குரு பகவான், அதிசாரமாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போது அதன் பார்வை பலத்தால் உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com