ராகு வருமிடம் இரண்டு நல்ல தகவல் வரும் திரண்டு!
மகர ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், 26.4.2025 அன்று குடும்ப ஸ்தானத்திற்கு வருகிறார். எனவே குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். அதே சமயம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.
ஞானகாரகன் கேது அஷ்டமத்தில் இருப்பதால் மிக கவனம் தேவை. இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக 2-ம் இடத்திற்கு ராகு வரப்போகிறார். இதனால் பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். வியாபாரப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சவாலாகத் தெரிந்த வேலை களைக் கூட சாதாரணமாக முடிப்பீர்கள்.
கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு. உறவினர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். நினைத்ததை நினைத்தபடி முடிப்பீர்கள். தெளிவான சிந்தனையோடு செயல்படுங்கள்.
அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. மேலும் அவர் சூரியன் வீட்டில் சஞ்சரிப்பதால், அரசு வழி சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். சர்ப்ப கிரகங்கள் 8-ல் வரும்பொழுது சஞ்சலங்கள் அதிகரிக்கும்.
இதுபோன்ற நேரங்களில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் தேவை. அதோடு தெய்வ நம்பிக்கையும் அவசியம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். வேலைப்பளு கூடும். அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள்.
குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.4.2025 முதல் 31.10.2025 வரை)
பூரட்டாதி நட்சத்திரக் காலில் குரு சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, நன்மையும் தீமையும் கலந்தே நடைபெறும். குரு பகவான் உங்கள் ராசிக்கு சகாய -விரய ஸ்தானாதிபதி ஆவார். எனவே சுப விரயம் ஏற்படும். குடும்பச்சுமை அதிகரிக்கும்.
இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடமாற்றம், வீடு மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.
சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)
உத்திரம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, மிக மிக கவனமாக செயல்படுங்கள். எதிலும் ஈடுபாடு இருக்காது. உதவி செய்வதாகச் சொன்னவர்கள், கடைசி நேரத்தில் கையை விரிப்பர். நண்பர்கள் பகையாக மாறுவர். புது முயற்சிகளில் தடைகள் குறுக்கிடும், உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் சண்டை, சச்சரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மன வருத்தம் ஏற்படும். பொறுமையும், நிதானமும் அதிகம் தேவைப்படும்.
சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)
பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும்பொழுது, பிள்ளைகள் வழியில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆடை, ஆபரணப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.
தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். பெற்றோரின் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வருவதற்கான அறிகுறி தென்படும். சகோதர வழியில் உதவி கிடைக்கும்.
சனிப்பெயர்ச்சி காலம்
6.3.2026 அன்று சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இப்பொழுது உங்கள் ராசிக்கு ஏழரைச் சனி முழுமையாக விலகிவிட்டது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். தடைப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை இதுவரை தாமதித்து வந்த பதவி உயர்வு இப்பொழுது தானாக வரலாம். சேமிப்பு உயரும்.
குருப்பெயர்ச்சி காலம்
ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. 11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதன் விளைவாக எதிரிகளின் பலம் மேலோங்கும். லட்சியங்கள் நிறைவேறுவதில் சில தடைகள் குறுக்கிடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும்.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். அக்டோபர் 8-ந் தேதி குரு பகவான், அதிசாரமாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போது குரு பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். திடீர் முன்னேற்றம் ஏற்படும்.