சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, தன ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே இந்த மாதம், சென்ற மாதத்தை காட்டிலும் சிறந்த பலன்களை வழங்கப்போகிறது.
செல்வ நிலை உயரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தாமதித்து வந்த சுப காரிய பேச்சுகள் இப்பொழுது முடிவுக்கு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.
குரு வக்ரம்
ரிஷப ராசியில் உள்ள குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். விரயாதிபதி குரு வக்ரம் பெறுவது நன்மைதான். அதே சமயம் சகாய ஸ்தானத்திற்கும் குரு அதிபதி என்பதால், முன்னேற்றத்தில் சில சறுக்கல்களும் வரத்தான் செய்யும்.
முக்கிய புள்ளிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். நல்ல சந்தர்ப்பங்கள் வந்தாலும், அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு குறையலாம். அவர்களுக்காக செலவு செய்யும் சூழல்நிலையும் உண்டு.
சனி - செவ்வாய் பார்வை
கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். செவ்வாயின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் குடும்பச் செலவு அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்களில் ஒரு சிலர் ஏமாற்றத்தை சந்திப்பார்கள்.
வீடு கட்டுவது, கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். 'வியாபார இடத்தை வேறு இடத்திற்கு மாற்றலாமா?' என்ற யோசனை அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை முன்நின்று நடத்தி வைப்பீர்கள்.
மகர - சுக்ரன்
கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு வரும் சுக்ரனால் நன்மைதான். பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசிக்கு வரும் பொழுது மிகுந்த நன்மைகளை வழங்குவார்.
திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மனதில் நினைத்ததை மறு கணமே செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவதில் கவனம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் நேரம் இது.
செவ்வாய் வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் அடைகிறார். உங்கள் ராசிக்கு லாபாதி பதியான செவ்வாய் வக்ரம் பெறுவதால், பண நெருக்கடி அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களை விட்டு விலகலாம். குடும்பச் சுமை கூடும்.
கொடுக்கல்- வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படும். 'வீடு மாற்றம் செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள். பொதுவாக பொறுமை அதிகம் தேவைப்படும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் சிலருக்கு மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு செல்வாக்கு உயரும். மாணவ - மாணவி களுக்கு முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் நேரம் இது. பெண்களுக்கு வருமானம் உயரும். உறவினர் பகை அகலும். சுபச்செலவு அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்:- 25, 26, 30, டிசம்பர்: 1, 2, 8, 9, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.