search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    LKG சீட்டுக்காக பள்ளி முன்பு போர்வை விரித்து தூங்கிய பெற்றோர்கள்
    X

    பள்ளி முன்பு இன்று காலை நீண்ட வரிசையில் காத்திருந்த பெற்றோர்.

    LKG சீட்டுக்காக பள்ளி முன்பு போர்வை விரித்து தூங்கிய பெற்றோர்கள்

    • குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது உறவினர்கள் யாராவது மாறி மாறி அந்த வரிசையில் நின்றனர்.
    • இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தண்ணீர் பாட்டிலுடன், இரவு உணவையும், இன்று காலை சாப்பிட வேண்டிய உணவையும் எடுத்து வந்து அங்கு வைத்து சாப்பிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை-பாளை ஆகியவை இரட்டை நகரங்களாக விளங்கி வருகிறது. இதில் பாளை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் நிறைந்துள்ளன.

    இதில் பாளையில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒவ்வொரு புதிய கல்வியாண்டின்போதும் இங்கு மாணவர் சேர்க்கையின்போது கடும் போட்டி நிலவும். இந்த ஆண்டு இன்று எல்.கே.ஜி. குழந்தைகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை அறிந்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று மாலை முதலே பள்ளி முன்பு வரத்தொடங்கினர். தங்களின் குழந்தைகளுக்கு எப்படியாவது ஒரு இடம் இந்த பள்ளியில் கிடைத்து விட வேண்டும் என்ற பரிதவிப்பில் அவர்கள் இரவு முழுவதும் பள்ளியின் நுழைவு வாயில் முன்பே காத்திருந்ததை காண முடிந்தது.

    நேரம் செல்ல செல்ல ஏராளமான பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். இதனால் அவர்கள் தாங்களாகவே ஒரு நோட்டினை தயார் செய்து முதலில் வந்தவர் தனது பெயரை பதிவு செய்து, அதனை தொடர்ந்து வரக்கூடிய ஒவ்வொரு பெற்றோரின் பெயர்களையும் வரிசை எண்கள் இட்டு எழுதி வைத்தனர். இந்த முன்னுரிமைக்காக நோட்டு இருந்தாலும், பெண் குழந்தைகளின் பெற்றோர்களோ, உறவினர்களோ யாராவது ஒருவர் வரிசையில் நிற்க வேண்டும் என அவர்களுக்குள் விதிமுறைகள் வைத்துக்கொண்டு குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது உறவினர்கள் யாராவது மாறி மாறி அந்த வரிசையில் நின்றனர்.

    ஒரு கட்டத்திற்கு பிறகு இரவில் சில பெற்றோர்கள் போர்வை, தலையணையுடன் பள்ளியின் வாசலில் விரித்து தூங்கினர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தண்ணீர் பாட்டிலுடன், இரவு உணவையும், இன்று காலை சாப்பிட வேண்டிய உணவையும் எடுத்து வந்து அங்கு வைத்து சாப்பிட்டனர். சுமார் 125-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இரவில் பள்ளி முன்பு காத்திருந்தனர். அந்த பள்ளியை காண்பதற்கு ஒரு சில பெற்றோர்களுடன் பெண் குழந்தைகளும் வந்ததை காண முடிந்தது. எல்.கே.ஜி.யில் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் விடிய, விடிய பள்ளி வாசலில் காத்திருந்த சம்பவம் ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து இன்று காலை அந்த சாலை முழுவதும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பெற்றோர்கள் வரிசையாக நின்றனர். பள்ளி திறந்தவுடன் அவர்கள் விண்ணப்பத்தை வரிசையாக நின்று வாங்கி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×