search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. ஆட்சியின் இருளை உதயசூரியன் போக்கும்: கருணாநிதி பேச்சு
    X

    அ.தி.மு.க. ஆட்சியின் இருளை உதயசூரியன் போக்கும்: கருணாநிதி பேச்சு

    அ.தி.மு.க. ஆட்சியின் இருளை உதயசூரியன் போக்கும் கருணாநிதி பிரசாரம்
    சென்னை :

    தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து வேன் மூலம் புறப்பட்டு மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், விருகம்பாக்கம், தி.நகர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    மயிலாப்பூர் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனை ஆதரித்து சிட்டி சென்டர் அருகிலும், வேளச்சேரி தி.மு.க. வேட்பாளர் நடிகர் சந்திரசேகரை ஆதரித்து திருவான்மியூரிலும், சோழிங்கநல்லூர் தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேசை ஆதரித்து மேடவாக்கத்திலும், தாம்பரம் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து தாம்பரம் பஸ் நிலையத்திலும் பிரசாரம் செய்தார்.

    இரவு 8.10 மணிக்கு பல்லாவரம் தி.மு.க. வேட்பாளர் இ.கருணாநிதியை ஆதரித்து பல்லாவரம் பஸ் நிலையம் அருகிலும் ஆலந்தூர் தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து ஆலந்தூர் எம்.கே.என். சாலையிலும் வேன் பிரசாரம் செய்தார்.

    இரவு 8.40 மணிக்கு விருகை தொகுதி தி.மு.க. வேட்பாளர் க.தனசேகரனை ஆதரித்து சாலிகிராமம் தசரதபுரம் பஸ் நிலையம் அருகிலும், தி.நகர் வேட்பாளர் டாக்டர் கனிமொழியை ஆதரித்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் அருகிலும் பேசினார்.

    பிரசாரத்தில் கருணாநிதி பேசியதாவது:–

    நாடு வாழ, நல்லாட்சி மலர உங்கள் அன்பான ஆதரவை தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வழங்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் படிந்துள்ள இருள் விலக, தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ நீங்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.

    இந்த ஆட்சியில் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். இந்த ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

    உங்கள் கைகளில் தான், தமிழ்நாட்டின் எதிர் காலம் இருக்கிறது. அந்த எதிர்காலத்தை எழில் காலமாக மாற்றி அமைத்து, திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஒன்றான, சமத்துவம், சமதர்மம், மதச்சார்பற்ற தன்மை, இவைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் அளித்து, இளைஞர்கள் எழுச்சி பெறவும், வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு நன்மை, தாய்மார்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளில் இருந்து விடுதலை– இவைகளை நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பை நம்முடைய கழகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

    தி.மு.க. ஆட்சி ஏற்கனவே நடைபெற்ற கழக ஆட்சியில் எத்தகைய சாதனைகள் நடைபெற்றன என்பது உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட கழக ஆட்சி மீண்டும் நடைபெற உங்களுடைய அன்பான ஆதரவு தேவை. எதிர் காலம் இளைஞர்களுடைய கைகளிலேதான் இருக்கிறது.

    தி.மு.க. இந்த தேர்தலில் பெரு வெற்றியை பெறும் என்று தமிழ்நாட்டில் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த மக்களில் நீங்களும் இருக்கிறீர்கள்.

    எனவே இளைஞர்களாகிய நீங்கள், இதே ஆர்வத்தை தொடர்ந்து காட்டி, அக்கறையில்லாமல் அவசரத்துக்கு ஆளாகி கோட்டை விட்டு விடாமல், கழகத்தின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கருணாநிதி பேசினார்.

    மாலை 6 மணிக்கு வேன் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி இரவு 10 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்தார்.

    குரோம்பேட்டை பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி ஆகிய இடங்களில் கடும் வாகன நெரிசலில் கருணாநிதியின் கார் போக முடியாமல் 15 நிமிட நேரம் சிக்கிக் கொண்டது.

    அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமான இளைஞர்களும், பெண்களும் தங்களது மொபைல் போன்கள் மூலம், வாகனத்தின் வெளிச்சத்தில் கருணாநிதியை போட்டி போட்டு படம் எடுத்து மகிழ்ந்தனர்.
    Next Story
    ×