search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம்
    X

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம்

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம் செய்கிறார். வீதி, வீதியாக வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.
    சென்னை :

    தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

    முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.

    தற்போது ஜெயலலிதா தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு கடந்த 25-ந் தேதி வந்திருந்தார். அப்போது அவருக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வேன் மூலம் புறப்பட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று தனக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    தொகுதிக்கு தான் செயல்படுத்திய நலத்திட்டங்களையும், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களையும் எடுத்துரைத்து ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு வாக்குகள் சேகரிக்க உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம், கொருக்குப்பேட்டை உள்பட இடங்களில் ஜெயலலிதா திறந்தவேனில் பேசி வாக்குகள் சேகரித்தார்.

    தற்போது அதே இடங்களில் ஜெயலலிதா மீண்டும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் ஜெயலலிதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் அவருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது பிரசாரம் செய்வதற்காக ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதிக்கு வர உள்ளதையடுத்து, அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு மேள-தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கவும் தற்போதே தயாராகி வருகின்றனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா தனது சூறாவளி பிரசாரத்தை கடந்த மாதம் 9-ந் தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்கி, விருத்தாசலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சீபுரம், சேலம், திருச்சி, புதுச்சேரி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நிறைவு செய்துள்ளார்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் பொதுக் கூட்டத்தின் வாயிலாக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா வாக்குகள் சேகரிக்க உள்ளார். தொடர்ந்து 8-ந் தேதி தஞ்சாவூரிலும், 10-ந் தேதி வேலூரிலும், 12-ந் தேதி நெல்லையிலும் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். 
    Next Story
    ×