search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    திருமணத்தடை, பேச்சு குறைபாட்டை நீக்கும் திருநாங்கூர் மதங்கீசுவரர்
    X

    திருமணத்தடை, பேச்சு குறைபாட்டை நீக்கும் திருநாங்கூர் மதங்கீசுவரர்

    • நாகை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் ஒன்றுதான் மதங்கீசுவர சுவாமி ஆலயம்.
    • சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் அன்னை மதங்கீசுவரி.

    நாகை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் ஒன்றுதான் மதங்கீசுவர சுவாமி ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் 'மதங்கீசுவரர்.' இறைவி பெயர் 'ராஜமதங்கீசுவரி.' கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் முன் முகப்பை தாண்டியதும், விஸ்தாரமான பிரகாரம் காணப்படுகிறது. அதன் வலதுபுறம் அம்பாளுக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

    இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு. அவை அஞ்சனாட்சி, சங்கீத யோகி, சியாமா, சியாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி, சசிவேசான், ப்ரதானேசி, சுகப்ரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணீ, ப்ரயகப்ரியா, நீபப்ரியா, கதம்பவன வாசினி என்பன. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து காட்சி தரும் அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

    பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். திருமணம் நடைபெறாமல் தாமதமாகும் ஆணோ, பெண்ணோ அன்னையின் சன்னிதிக்கு, அஷ்டமி அன்று வருகின்றனர். மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர்.

    பின் அந்த தேங்காயை அர்ச்சகர் வேண்டுதலை வைப்பவரிடமே தந்து விடுகிறார். 11 மாதங்கள் அந்த தேங்காயை வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அதற்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். வேண்டியபடி திருமணம் நடந்ததும், மணமான தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.

    சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் அன்னை மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு வித்யாபியாசம் செய்ததால், இந்த அன்னையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும் என்பது நிதர்சனமான உண்மையே.

    வழக்கமாக சிவாலயங்களில் இறைவனின் கருவறைக்கு எதிரே ஒரு நந்தி தான் இருக்கும். ஆனால் இங்கு கிழக்கும், மேற்கும் நோக்கிய இரண்டு நந்திகள் இருப்பது எங்கும் காணாத சிறப்பம்சமாகும். இதில் கிழக்கு நோக்கி உள்ள நந்தி 'சுவேத நந்தி' எனவும், மேற்கு நோக்கி உள்ள நந்தி 'மதங்க நந்தி' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நந்திகளையும் பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிட்டும் என்கின்றனர். இந்த இரட்டை நந்திகளை 'மாப்பிள்ளை நந்தி' எனவும், 'மாமனார் நந்தி' எனவும் அழைக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    மயிலாடுதுறையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருநாங்கூர் தலம்.

    -பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

    Next Story
    ×