search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    உதவி செய்ய வல்லவர்
    X
    உதவி செய்ய வல்லவர்

    உதவி செய்ய வல்லவர்

    ஆண்டவர் உபத்திரவங்களையும், சோதனைகளையும் ஜெயிக்க உங்களுக்கு பெலன் தருவார். நிச்சயமாகவே ஆண்டவர் உபத்திரவ நேரத்தில் உங்களுக்கு உதவி செய்து தாங்க வல்லவராயிருக்கிறார்.
    “ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்” (எபி.2:18)

    நீங்கள் சோதனையின் மத்தியிலே, உபத்திரவத்தின் மத்தியிலே கடந்து போகும் போது, மிகவும் துக்கப்பட்டு, ஏன் இந்த சோதனை என்று அழுது புலம்புகிறீர்கள்.

    ஆனால் ஒரு சத்தியத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த உலகத்தில் வாழுகிற வரைக்கும், நீங்கள் உபத்திரவங்களையும், பாடுகளையும் சந்தித்துதான் ஆக வேண்டும்.

    இயேசு சொன்னார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா. 16:33).

    “பிரியமானவர்களே, உங்களை சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சநதோஷப்படுங்கள்” (1 பேது. 4:12,13) என்று வேத வசனம் சொல்லுகிறது.

    உங்களுடைய வாழ்க்கையிலே, உபத்திரவங்களும் பாடுகளும் வரும்போது, இது ஏதோ புதுமை என்று எண்ணி நீங்கள் திகைக்க வேண்டாம். இந்தச் சோதனையானது உங்களுடைய தரத்தை நிரூபிப்பதற்காக, சோதிப்பதற்காக வருகிறது.

    உதாரணமாக, ஒரு மாணவன் அடுத்த வகுப்பிற்கு போக வேண்டுமென்றால், அவன் தேர்வு எழுதிதான் ஆகவேண்டும். அவன் தேர்வு எழுதும்போது ஏன் இந்தச் சோதனை, ஏன் இந்தத் தேர்வு, ஏன் படிக்கக்கூடிய போராட்டம் என்று நினைக்கலாம். ஆனால் அந்தத் தேர்விலே அவன் தேர்ச்சியடையும்போதுதான் அவன் உயர் வகுப்பிற்கு செல்லுகிற மகிழ்ச்சி அவனுக்கு வருகிறது.

    அதுபோலத்தான் நீங்கள் அடுத்த நிலைக்கு, அதாவது உயர்ந்த நிலைமைக்கு செல்ல வேண்டுமென்றால், உங்களுடைய வாழ்க்கையிலே, குணாதிசயத்திலே, விசுவாசத்திலே நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால் சோதிக்கப்பட வேண்டியது அவசியம். அந்தச் சோதனையையும், உபத்திரவங்களையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்.

    ஆகவே, நீங்கள் சோதனையின் மத்தியிலும், உபத்திரவத்தின் மத்தியிலும் கடந்து போகும்போது சோர்ந்து போகாதிருங்கள். ஆண்டவருடைய வார்த்தைகளை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள்.

    அவர் உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்ற வார்த்தையோடு நிறுத்திவிடவில்லை. ‘திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன். நீங்களும் இந்த உலகத்தை ஜெயிக்கும்படி உங்களுக்கு உதவிச் செய்வேன்’ என்றார்.

    “நான்போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10).

    பிரியமானவர்களே, திடன் கொள்ளுங்கள். கலங்காதிருங்கள். ஆண்டவர் உபத்திரவங்களையும், சோதனைகளையும் ஜெயிக்க உங்களுக்கு பெலன் தருவார். நிச்சயமாகவே ஆண்டவர் உபத்திரவ நேரத்தில் உங்களுக்கு உதவி செய்து தாங்க வல்லவராயிருக்கிறார்.

    போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை
    Next Story
    ×