தமிழ்நாடு

பாஜக திடீர் தலைவர்களை உருவாக்கி அதிமுகவை சீண்டுகிறது- தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

Published On 2024-04-15 14:11 GMT   |   Update On 2024-04-15 14:11 GMT
  • மக்களைப் பிரித்தாலும் சூழ்ச்சி செய்யும் கட்சி வடக்கிலிருந்து வந்த பாஜக
  • அதிமுக என்னும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை பாஜக உணர வேண்டும்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில்,

"எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று சட்டமன்றத்தில் சிங்கமாக கர்ஜித்தாரே நம் அன்புத் தாய், அந்தத் தாயின் சபதத்தை நிறைவேற்ற 'நான் உழைப்பேன், உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன்' என்று சபதம் எடுத்துக்கொண்டு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் இலட்சிய உணர்வோடு உழைத்து வருகிறீர்கள்.

கழக உடன்பிறப்புகளே, உங்கள் நம்பிக்கைகள் எதுவும் வீணாகாது. உங்களுக்காக இங்கே ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நாடாளுமன்ற மக்களவையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் காலத்தைப் போலவே, மிகப் பெரிய கட்சியாக நாம் அமர்ந்திட உங்கள் உழைப்பும், கவனமும் இந்த பிரசாரத்தின் கடைசி நாட்களில் தேவைப்படுகின்றன.

ஏராளமான ஊழல் பணத்துடனும், தேர்தல் நிதியாகத் திரட்டிய பெரும் பண மூட்டையுடனும் தீய சக்தியான திமுக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறது.

நமது இயக்கத்தை பிளவுபடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம். வன்முறை வெறியாட்டங்களையும், வடக்கே இருந்து ஏவப்படும் விஷ அம்புகளையும், ஆளும் கட்சிக்கு இருக்கும் அதிகார மமதையில் நடத்தப்படும் அருவருக்கத்தக்க ஏற்பாடுகளையும், 1972-ல் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து நாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்? இத்தகைய கோழைத் தனங்களைத் தாண்டிதானே எண்ணற்ற வெற்றிகளை நாம் பெற்று வருகிறோம்?

நாம் வம்பு சண்டைக்குப் போவதில்லை. ஆனால், வந்த சண்டையை விடுவதில்லை. நாம் அமைதியை நாடுபவர்கள். ஆனால், நமது அமைதியும், சாந்தமும் வீரத்தின் வேறு வடிவங்களே. அதிமுக என்னும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை, நம்மை சீண்டிப் பார்க்கும் இந்த சிற்றறிவு மனிதர்கள் உணர்ந்துகொள்ளட்டும்.

இந்த தேர்தலில் நமது அர்ப்பணிப்பும், உழைப்பும், ஈடுபாடும் பல மடங்கு இருக்க வேண்டும். துவளாமல், அஞ்சாமல், அயராமல் 'வெற்றி ஒன்றே' நம் இலக்காகக் கொண்டு தேர்தல் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.

வெற்றி நமதே! 40-ம் நமதே. நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்று அவர் எழுதியுள்ளார்.

Tags:    

Similar News