இந்தியா

சனாதனம் பற்றிய கருத்துக்கு உதயநிதியை தண்டிக்க வேண்டும்: காங்கிரஸ் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி ஆவேசம்

Published On 2024-04-20 06:08 GMT   |   Update On 2024-04-20 08:47 GMT
  • உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்தை இந்தியா கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
  • உதயநிதி ஸ்டாலின் மீது சனாதன ஒழிப்பு கருத்து தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு விவாதத்தை கிளப்பியது. இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என தெலுங்கானா காங்கிரஸ் முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு கருத்து குறித்த கேள்விக்கு கடும் கோபத்துடன் ஆவேசமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது:-

உதயநிதியின் கருத்து தவறானது. இதனை நான் கண்டிக்கிறேன். அது அவரது எண்ணம். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என அவர் கூறியதற்காக தண்டிக்கப்பட வேண்டும்.

ஒரு குடும்பத்திற்குள் கூட, தனிநபர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், உதயநிதியின் நிலைப்பாடு அவருடையது.

தெலுங்கானா மாநிலத் தலைவர் மற்றும் முதல்-மந்திரி என்ற முறையில், சனாதன தர்மம் குறித்த கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தவறான கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே நமது கொள்கை. மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தீங்கு விளைவிக்காமல் அனைத்து நம்பிக்கைகளையும் நிலை நிறுத்துவது முக்கியம்.

பாஜகவின் "400 தொகுதிகளில் வெற்றி முழக்கம் என்பது தேர்தல் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருத்தமானது.

தற்போது இது சாத்தியமில்லை. மக்களவையில் 400 இடங்கள் என்ற இலக்கை அடைய பா.ஜ.க. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாக்கு கேட்க வேண்டும்.

குஜராத்தில் 26 இடங்களையும், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும், டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றாலும் கூட. பீகாரில் 39 முதல் 40 இடங்களும், உத்தரபிரதேசத்தில் 62 இடங்களும், வங்காளத்தில் 18 இடங்களும், வட மாநிலங்களில் கணிசமான பெரும்பான்மையும் பெற்றால், 300 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும். பா.ஜ.க.வால் இலக்கை அடைய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்- மந்திரி கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் விரைவில் பா.ஜ.கவுக்கு சென்று விடுவார் என தெலுங்கானா எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News